×

திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ரூ.3 கோடி மானநஷ்ட வழக்கு: மன்சூர் அலிகான் தாக்கல் செய்தார்

சென்னை: நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், ஒவ்வொருவரும் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் நடித்திருந்தனர். ஆனால், எந்தக் காட்சியிலும் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. இதுதொடர்பாக பேட்டி அளித்திருந்த மன்சூர் அலிகான், அப்போது பேசிய அவதூறு சொற்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நடிகையும், பாஜ பிரமுகரும், தேசிய மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனக்கு எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், திரிஷாவிடம் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதற்கு திரிஷா, ‘தவறிழைப்பது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்’ என்று சொல்லி மன்சூர் அலிகானை மன்னித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகிய மூவர் மீதும் வழக்கு தொடர உள்ளதாக கடந்த நவம்பர் 27ம் தேதி மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். தான் அளித்த பேட்டியை ஒரு வாரத்துக்கு பின்பு ‘எடிட்’ செய்து திட்டமிட்டு பரப்பியுள்ளதாக மன்சூர் அலிகான் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி மீதும், மேலும் சர்ச்சைக்குரிய வகையில் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும் வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை தொடருவதாகவும், சில ஆதாரங்களுடன் வழக்கு தொடுப்பதாகவும் மன்சூர் அலிகான் அப்போது தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மீது தலா ஒரு கோடி ரூபாய் வீதம் மொத்தம் ரூ.3 கோடி பணம் கேட்டு மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் அன்று நடக்கிறது.

The post திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ரூ.3 கோடி மானநஷ்ட வழக்கு: மன்சூர் அலிகான் தாக்கல் செய்தார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Trisha ,Khushbu ,Chiranjeevi ,Mansoor Alikhan ,Chennai ,Mansoor Ali Khan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான...