×

கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் ஆயக்குடி மாம்பழம்: சாலையோரங்களில் முளைக்குது திடீர் கடைகள்

பழநி: கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் மாம்பழங்கள் விற்பனை செய்வதற்காக சாலையோரங்களில் திடீர் கடைகள் முளைத்துள்ளன.தமிழகத்தில் மாம்பழ விளைச்சலில் பிரசித்தி பெற்ற ஊர்களில் சேலத்தை போல், பழநி அருகேயுள்ள ஆயக்குடியும் ஒன்றாகும். ஆயக்குடியில் பங்கனவள்ளி, பனாரஸ், அல்போன்ஸ், செந்தூரா மற்றும் கிரேப் வகை மாம்பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அதிகளவு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது மாம்பழ சீசன் துவங்கி உள்ளதால், ஆயக்குடி மாம்பழங்களை கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பழநி- கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் வரை தற்போது ஏராளமான மாம்பழ விற்பனை கடைகள் திடீரென முளைத்துள்ளன. தோட்டங்களில் இருந்து பறித்தவுடன் விற்பனைக்கு கொண்டு வருவதால் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதுகுறித்து மாம்பழ விவசாயி கோவிந்தராஜ் கூறியதாவது, ‘சீசன் தற்போதுதான் துவங்கி உள்ளது. இதனால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் பங்கனவள்ளி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. அல்போன்சா, கிரேப் வகை மாம்பழங்கள் கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. செந்தூரா கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீசன் உச்சத்தின்போது விலை குறைய வாய்ப்புள்ளது. செயற்கை முறையில் பழுக்க வைக்காமல், பறித்தவுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்’ என்றார்….

The post கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் ஆயக்குடி மாம்பழம்: சாலையோரங்களில் முளைக்குது திடீர் கடைகள் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Palani ,Tamil Nadu ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்