×

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்

சென்னை: திரிஷா பற்றி ஆபாசமாக பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுள்ளார். யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திரிஷாவை பற்றி ஆபாசமாக பேசினார் மன்சூர் அலிகான். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் மீது வழக்கு தொடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். நேற்று அவர் ஆஜரானார்.

இந்நிலையில் இது குறித்து மன்சூர் அலிகான் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆம், அடக்க நினைத்தால் அடங்கமறு. இப்ப சொல்கிறேன் என்னை மன்னித்துவிடு. ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அகிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி, அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண், மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு.

மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் ஜிஎஸ்டி, எஸ்டி டோல்கேட், பெட்ரோல் காஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். எனது சக திரைநாயகி திரிஷாவே… என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக. ஆமீன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது பற்றி எக்ஸ் தளத்தில் திரிஷா வெளியிட்ட பதிவில், ‘தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது தெய்வச் செயல்’ என குறிப்பிட்டுள்ளார்.

The post திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mansoor Ali Khan ,Trisha ,Chennai ,Mansoor Alikhan ,YouTube ,National Commission for Women ,Mansoor… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக...