அர்த்தமுள்ள இந்துமதம் - 53
ஆசை இருக்கிறது; அனுபவிக்கும் எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறது. எதை அனுபவிப்பது என்பதிலே பேதம் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது நாட்டம் இருக்கிறது. தஞ்சாவூரிலே நிலம் வாங்கலாமா? ஆற்க்காட்டுப் பக்கம் வளமான நிலம் கிடைக்குமா? - என்று அலைகிறார்கள் பலர். ‘இந்த நாட்டை ஆள மாட்டோமா; அந்த நாட்டை ஆளமாட்டோமா?’ என்று தவிக்கிறார்கள் சிலர். - இவை மண்ணாசை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ‘இவள் தனக்குக் கிடைக்க மாட்டாளா?’ என்ற எண்ணம் சிலரது பிடரியில் வந்து உட்காருகிறது. - இது பெண்ணாசை.
லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும், ‘இன்னும் ஒரு பத்து ரூபாய் கிடைக்கும்’ என்றால், சில மனிதர்கள் எந்த வேலையையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள். - இது பொன்னாசை. எந்த மேடையில் தோன்றினாலும், ‘எல்லா மாலையும் தனக்கே விழ வேண்டும்,’ என்று சில மனிதர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள். - இது புகழாசை.
ஆசையை மூன்றாகத்தான் வகுத்தார்கள் நம்முடைய ஞானிகள்; காலம் அதை நான்காக ஆக்கி இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது, அதற்கு எந்த ஆசையும் இல்லை. அது தாயை அடையாளம் கண்டு கொள்ளவே பல நாட்களாகின்றன. முதலில் அதற்குப் பசி மட்டும் எடுக்கிறது. நாள் ஆக ஆகப் பாசம்தான் உருவாகிறது. பிறகு ரொட்டி, மிட்டாய் மீது ஆசை வருகிறது. தொடர்ந்து பொம்மைகள் மீது ஆசை வருகிறது. பிறகு விளையாட்டிலே ஆசை. பிறருக்கு ஆபத்தில்லாத இந்த ஆசைகள், இருபது வயதோடு முடிந்து விடுகின்றன.
அங்கிருந்து பெண்ணாசை ஆரம்பமாகிறது. பெண் கிடைத்து விட்டால், பொன்னாசை தொடங்குகிறது. பிள்ளைகள் இரண்டு பிறந்து விட்டால், மண்ணாசை வளர்ந்து விடுகிறது. ஆனால், எந்தக் காலத்திலும், புகழாசை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று வளர்ந்து வரும் ஆசைகளில் விழுந்து, விழுந்து மனிதன் கரையேற முடியாமல் தவிக்கிறான்.
‘போதுமே இந்த வாழ்வு’ என்று ஒரு நாள் அவனுக்குத் தோன்றுகிறது. அற்புதமான சாப்பாடும், அடுத்தொரு பெண்ணும் அவனுக்குக் கிடைத்து விட்டால், ‘இந்தச் சுகத்தை விட்டு விடுவதா’ என்ற நினைப்பு வந்து விடுகிறது. கீதையில் சொல்லப்படுகின்ற சத்துவ, ரஜோ, தமோ என்ற மூன்று குணங்களிலே இது நடுக்குணம். ரஜோ குணம் படைத்த ஒருவன், இவ்வளவு ஆசைகளிலும் மூழ்கித் திளைக்கிறான். இவனைத்தான் ‘ராஜா’ என்கிறோம்.
இந்த ராஜாக்கள் திடீரென்று ‘தமோ’ என்னும் தாமஸ குணத்தில் தள்ளப்படுகிறார்கள். சிலர் சாத்விக குணத்துக்குத் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வார்கள். ஆனால், பெரும்பாலும், ரஜோ தமோவுக்கும், தமோ ரஜோவுக்கும் தள்ளப்படுவது வழக்கம். உலகத்தில் ஆனந்தமாக அனுபவித்த போகிகளின் வரலாற்றை முதலில் கவனிப்போம். புகழ் பெற்ற ரோமாபுரியை நீங்கள் அறிவீர்கள். ஆடை உடுத்த நேரமில்லாமல் அனுபவித்தார்கள் அந்நாட்டு மன்னர்கள்.
மன்னர்கள் மட்டுமா? மகாராணிகள் கதை என்ன? ஆடவர்கள் புதுப்புது பெண்களுக்கு ஆள் அனுப்புவது போல், புதுப்புது ஆடவர்களுக்கு ஆள் அனுப்பியவர்கள் அந்நாட்டுப் பெண்கள். பாலுணர்ச்சி வரைமுறை இல்லாமல் போயிருந்த மண்டலங்களிலே அதுவும் ஒன்று. உணவு முறையிலே இன்னின்ன பொருட்களைத் தான் சாப்பிடலாம் என்ற விவஸ்தையும் அங்கே இருந்ததில்லை. கோழி இறைச்சியிலிருந்து, குதிரை இறைச்சி வரை உண்டு தீர்ப்பதே உற்சாகம் என்று கருதப்பட்டது.
இது உஷ்ணம்; இது சீதளம்; இது வாயு என்றெல்லாம் பார்த்து உயிரை விடுகிறோமே நாம், இவற்றில் எதையுமே பாராத பூமி அது. நமக்கோ திருமூலரின் ‘திருமந்திரம்’ உடம்பைப் பற்றிப் பேசுகிறது. சித்தர் பாடல்கள் உடம்பைப் பற்றிப் பேசுகின்றன. இந்து வேதங்கள் அளவறிந்து செயல்படுவதைக் குறிக்கின்றன. பற்றற்ற வாழ்க்கையையே ஒவ்வொன்றும் எடுத்து விளக்குகின்றன. ஆனாலும் கூட, நம்முடைய மூதாதையர்களும் நாமும் ரோமானியர்களுக்குச் சளைத்தவர்களாக இல்லை. கரிகாற்சோழன் ஒரு பெரிய ஆட்டுத் தொடையைத் தின்று விட்டு, குத்தீட்டியால் பல் குத்துவானாம்!
சோழன் என்ன சோழன்! நவீன சோழர்கள் அரைக் கோழியைக் கையிலே தூக்கிக் கொண்டு கடித்து இழுப்பதைப் பார்த்தால், ‘இது என்ன பல்லா, பாறையா?’ என்று கேட்கத் தோன்றும். இந்துக் குடும்பங்களில் உணவு முறையில் ஒரு ஆரோக்கியம் உண்டு. சூடான பதார்த்தத்தில் குளிர்ச்சியான பொருளைப் போடக்கூடாது. சூட்டுக்குச் சூடுதான் குளிர்ச்சி. கழுத்து வரை தண்ணீரில் குளித்தால், உடம்பில் இருக்கிற உஷ்ணமும் சிரசுக்கு ஏறுகிறது. உடம்பு முழுக்கக் குளித்த பிறகு தலையை நனைத்தால் மொத்த உஷ்ணமும் விலகி விடுகிறது.
எனக்கிருக்கும் ஒரே கோளாறு - உஷ்ணக் கோளாறு. நவீன டாக்டர்கள். ‘அப்படிப்பட்ட கோளாறே உலகத்தில் இல்லை’ என்று வாதிக்கிறார்கள். இதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் இருநூறு மைல் தூர பயணம் செய்து விட்டு, அந்த அலுப்பில் எட்டுக் குவளை தண்ணீர் குடிக்கிறோம்; ஒரு துளி நீர் கூட வெளியே வருவதில்லை. அதே நேரத்தில் உடம்பில் ஏறியுள்ள உஷ்ணத்தின் மீது மற்றொரு உஷ்ணம் படட்டும்; அதாவது வயிற்றுக்குள்ளே ஒரு குவளை வெந்நீரை ஊற்றிப் பாருங்கள். சூட்டுக்குச் சூடு, குளிர்ச்சியாகி சிறுநீர் பிரியத் தொடங்கும். இந்த மருத்துவ முறைகள் நமக்கு இரண்டாயிரம் ஆண்டுகாலமாகவே உள்ளவை.
இவை இருக்கின்றன என்ற தைரியத்தால்தான் நம்முடைய மூதாதையர் வாழ்க்கையைச் சுகமாக அனுபவித்தார்கள். ஆனால், பெரும்பாலோர் அளந்து அனுபவித்தார்கள். இப்போது சில பேர் சொல்வதைக் கேட்கிறேன்.‘என் பாட்டிக்கு நூற்று மூன்று வயது!’ என்கிறார் ஒருவர். ‘என் அப்பாவுக்கு நூறு வயது!’ என்கிறார் ஒருவர். ‘எனக்கு எண்பத்திரண்டு வயதாகிறது; இன்னும் ஒரு மாத்திரை கூடச் சாப்பிட்டதில்லை’ என்கிறார் இன்னொருவர். நாகரிகம் மிகுந்த நம்முள் சிலரோ, ஐம்பது வயதில் ஒரு மருந்து அலமாரியையே தூக்கிக் கொண்டு அலைகிறோம்.
காரணம், போகத்தை அனுபவிக்கும் முறையிலுள்ள பேதமே. ‘மாதர் போகம் மாதம் இருமுறை’ என்பது கிராமத்துப் பழமொழி. கணவனும் மனைவியும் தாங்கள் கலந்த தேதியை நினைவில் வைத்துக் கொண்டே இருப்பார்கள். பச்சையாக ஒரு பழமொழி உண்டு. ‘விந்து விட்டவன் நொந்து கெட்டான்’ என்று. ‘பதினான்கு நாள் சேமிப்பு. பதினைந்தாவது நாள் செலவு’ என்றிருந்த காரணத்தால், அவர்கள் இரவும் நன்றாக இருந்தது, உறவும் நன்றாக இருந்தது, உடலும் நன்றாக இருந்தது.
மருத்துவ வசதி மிகக் குறைவாக இருந்த காலங்களில், மருத்துவம் இல்லாமலேயே நம்முடைய மூதாதையர் நன்றாக வாழ்ந்தார்கள். தங்கள் செயலால் அவர்கள் நோய் தேடிக் கொண்டது இல்லை. கர்ம வினையாலோ, கடவுளின் தண்டனையாலோ மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய்கள் சிலருக்குத் தோன்றி இருக்கின்றன. தாமாக நோய் தேடிக் கொண்டவர்கள், மருந்தில்லாமல் செத்ததையும் நான் அறிவேன். எனக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் அடிக்கடி தாசி வீடு செல்வார்கள். அவர்களுக்கு ‘மேக நோய்கள்’ தோன்றின.
நவீன மருத்துவத்தில் அந்த நோய்களெல்லாம் இல்லாமலேயே இன்று ஒழிந்து விட்டன. அரையாப்பு, வெட்டை, கிரந்திப் புண் எனும் நோய்களே அவை. அதில் அவர்கள் பட்டபாடு, அப்பப்பா! மகாகவி பாரதி பாடினானே, ‘தாளம் படுமோ தறிபடுமோ’ என்று, அந்தப்பாடு! ஒருவர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகர விடுதியில் காலமானார், இன்னொருவர் கோவையில் வேலை பார்த்த இடத்தில் காலமானார். முப்பது வயதைத் தாண்டாமலேயே இருவரும் காலமாகி விட்டார்கள்.
பசிக்கிறது. உண்கிறோம், அதில் நிதானமில்லை. வெறி பிடிக்கிறது, மாதர் போகத்திற்கு அலைகிறோம், அதிலும் நிதானமில்லை. ஒரு இந்துவின் பாட்டன் அற்புதமான, ஆனால் ஆபத்தில்லாத சாப்பாட்டைச் சாப்பிட்டான்; மலையேறிச் சாமி கும்பிட்டு அதை ஜீரணித்தான்; குளத்தில் விழுந்து நீராடி உஷ்ணத்தைப் போக்கினான்; மாதம் இருமுறை மனைவியோடு உடலுறவு கொண்டு உடம்பைப் பேணினான். போகம் வரைமுறை இல்லாமல் போனால், ரோகம் வாசலில் காத்திருக்கும்.
யோகி வேமனா வரைமுறை இல்லாமல் வாழ்ந்தார்; ஆனால் அதன் பின் யோகி ஆனார். பட்டினத்தார் கதையையும், பாரதி அப்படித்தான் சொல்கிறான். ‘அளவுக்கு மீறினால் அமுதமும் விஷமாகும்’ என்பார்கள். அளவுக்கு மீறி அனுபவித்த அமெரிக்கன், ஹிப்பி ஆனான்; இந்தியன் சந்நியாசி ஆனான். உலகத்தின் ஒரு பகுதியையே ஆண்டு கொண்டிருந்த பிரெஞ்சு நாடு, போகத்திலேயே மூழ்கி அழிந்தது. சாப்பிடுகிறவன் உழைக்க வேண்டும்; அவனும் உடல் உறவை அளவோடுதான் வைத்துக் கொள்ள வேண்டும்.
நமது நாட்டில் சில உழைப்பாளிகள் சாப்பிடும்போது பார்த்திருக்கிறேன். மலை மாதிரி சாதத்தைக் குவித்து, நடுவிலே ஒரு குளம் வெட்டி, ஒரு குடம் சாம்பாரை ஊற்றி உண்பார்கள். அவர்களில் சிலருக்கு உடம்பு கனமாக இருக்கும். தொந்தி பெரிதாக இருக்கும். ஆனால் ஒரு மலையையே தூக்குவார்கள். நமக்கு விழும் தொந்தி பயனில்லாத சதை. நாம் சாப்பிடும் சாப்பாடு வெறும் வாயளவு போகம். ஆனால், தொழிலாளியின் அதிக அளவு சாப்பாடு, அவன் உழைக்கின்ற உழைப்புக்குத் தேவையானது.
அவன் அறுத்துத் தரும் நெல்லை அனுபவிக்கிறான் நிலச்சுவான்தார். அந்த அறுவடைக்கும் ‘போகி’ என்றுதான் பெயர், அனுபவிப்பவனுக்கும் ‘போகி’ என்றுதான் பெயர். போகத்தில் இன்னொரு போகம் உண்டு. அதுதான் தூக்கம்! நன்றாகத் தூங்குகிறவனைப் பார்த்து ‘சுகபோகி அப்பா’ என்பார்கள். மாதர் போகத்தால் வியாதி வாங்கியவர்கள் எதுவும் செய்ய முடியாமல், ரயிலைத் தவற விட்ட பிரயாணிகளாக ஆகி விடுவது உண்டு. சூரியோதயத்தையே பார்த்தறியாத பல குடிகாரர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு நடிகர். அவர் சமீபத்தில் காலமாகி விட்டார். அவர் எங்கள் ராணுவ தள சுற்றுப் பயணத்தின் போது எங்களோடு வந்திருந்தார்.
ஒரு விமான தளத்தில் இருந்து அதிகாலை ஆறு மணிக்கு விமானம் புறப்பட வேண்டியிருந்தது. அவரைக் கஷ்டப்பட்டு எழுப்பினோம். எழுந்தவர் அன்றைக்குத்தான் சூரியோதயத்தைப் பார்த்தார். ‘ஆகா, சூரியோதயம் எவ்வளவு அழகா இருக்கிறது!’ என்று அதையே அவர் ரசித்துக் கொண்டிருந்தார். நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப் படுத்தால் கூட, நான் சுகமாகத் தூங்கி விடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா? இரவில் சாப்பிட்டு விட்டுக் காரில் ஏறிப் படுத்தால், காலையில் திருச்சி வரும்போது தான் விழிப்பேன்.
அதிலே சிந்தனைக்கும் லாபம் இருப்பதே தவிர, வந்த லாபம் போகவும் செய்தது. ‘கும்பகர்ணன் மட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தால், ஸ்ரீராமனுடைய சைன்யம் சேதுக்கடலைத் தாண்டி இருக்காது!’ என்பார்கள். இரவும், பகலும் தூங்காமல் விழித்துக் கொண்டே நம்மைக் காவல் காக்கிறாள் மதுரை ‘மீனாட்சி’. ‘‘அவளுக்கு ‘மீனாட்சி’ என்று பெயர் வந்ததற்குக் காரணமே அதுதான்’’ என்கிறார் வாரியார் சுவாமிகள். மீன் போல் விழித்திருந்து அவள் ஆட்சி செய்வதால் அவள் மீனாட்சி. இதை எனது குருநாதர் வாரியார் சுவாமிகள் சொல்லும்போது அழகாகச் சொல்லுவார்.
‘ஓடும் ரயிலில் இரண்டாயிரம் பேர் தூங்குகிறோம். இஞ்சின் டிரைவர் விழித்துக் கொண்டிருக்கிறார். அவரும் தூங்கி விட்டால் இரண்டாயிரம் பேரும் என்ன ஆவது?’ என்று கேட்பார். ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கெட்டார்’ என்று தம்பி கல்யாணசுந்தரம் பாடி இருக்கிறார். தூக்கம் ஒருவகை லயம், ஒரு வகைச் சுகம், ஈடு இணையில்லாத போகம்! நல்ல தூக்கம் ஒருவனுக்கு வருவது, அவன் செய்த தவம், அவன் பெற்ற வரம்! ஆனால், கடமைகளை மறக்கடிக்கும் தூக்கம் போகமல்ல - ரோகம்.
காலை ஆறு மணிக்குத் திருமணம்; மாப்பிள்ளை ஏழு மணிக்கு எழுந்திருத்தால், நேரம் காத்திருக்குமா? ஆகவே, எந்தப் போகமும் அளவுக்குரியது. ஒரு குறிப்பிட்ட வயது வரையில், குழந்தைக்குத் தூக்கம் தான் வளர்ச்சி. அந்த வயதுக்குப் பின், விழிப்புத்தான் வளர்ச்சி. நன்றாக வளர்ந்து, காக்க வேண்டியவர்களைக் காத்து, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்த பிற்பாடு தூக்கம் ஒரு யோகம். காக்க வேண்டிய காலத்தில் தூங்குவதே ரோகம். ஆனால், துர்பாக்கிய வசமாகத் தள்ளாடும் வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்து விட்டுத் தூங்கப் போகிறவனுக்குத் தூக்கம் வராது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல், தூக்கம் குறையத் தொடங்கும்.
‘ஐயோ, தூங்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டுப் பயனில்லை. ‘சுகபோகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவித்துத் தீர்த்து விட்டோம்’ என்று ஆறுதலடைவதைத் தவிர வேறு வழியில்லை. திருடர் பயம் மிகுந்த இடத்தில், விழுந்து விழுந்து தூங்கினால் நஷ்டம். ஆபத்தான நேரங்களில், தூக்கத்தை அறவே விலக்கா விட்டால் கஷ்டம். தவறினால், ஒரு போகம் பல ரோகங்களுக்குக் காரணமாகி விடும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் தூங்குவான் அடால்ப் ஹிட்லர். அது அவனுக்குப் போதுமானதாகவே இருந்தது; மளமளவென்று வெற்றியையும் தேடித் தந்தது.
ஒரு நாள் அவன் நிம்மதியாகத் தூங்க விரும்பி, இரண்டு மாத்திரைகளையும் போட்டுக் கொண்டு தூங்கினான். அன்றைக்குத் தான் ‘நார்மண்டி’ முற்றுகை நடந்தது. ஐஸன்ஹோவரும், சர்ச்சிலும் ஆயிரக்கணக்கான கப்பல்களைப் பிரெஞ்சு நாட்டு ‘நார்மண்டி’க் கடற்கரைக்கு அனுப்பி வெற்றி பெற்று விட்டார்கள். ஹிட்லரின் தோல்விக்கு அமெரிக்காவின் அணுகுண்டா காரணம்? இல்லை, அவனுடைய தூக்கமே காரணம்! ஆகவே, அனுபவத்தின் காரணமாகச் சொல்கிறேன்; அனுபவிப்பதை அளவோடு அனுபவியுங்கள்.
உண்பதில் நிதானம் - உடலுறவில் நிதானம் - உறங்குவதில் நிதானம் - தீயன பழகாமல் இருத்தல் - அளவான வாழ்க்கையிலேயே அதிகமாக உற்சாகத்தைக் காணுதல் - இப்படி வாழ்ந்தால், இறைவன் ஒத்துழைப்பான். பூர்வ ஜென்ம பாவமோ, வினையோ, ஒரு புற்று நோயையோ, குடல் நோயையோ கொண்டு வந்தால் அது கர்மா. மற்ற நோய்களை நாமே வரவழைத்துக் கொண்டால், அது மடமை. இதை மற்றவர்கள் சொல்ல முடியாது;
நான் சொல்லலாம்.
அளவில்லாத வாழ்க்கை வாழ்ந்து, அந்த வாழ்க்கையிலேயே கண்களை மூடி விட எண்ணினேன். ஆனால், நிதானமாக அந்த அனுபவங்களைச் சிந்தித்துப் பார்க்கும் நேரங்களை இறைவன் எனக்களித்திருக்கிறான். போகத்தில் வைக்கின்ற பற்று, வரைமுறையைத் தாண்டினால், ரோகம் காத்திருக்கிறது. ரோகியாகித்தான் நீங்கள் யோகி ஆக வேண்டுமா? இன்னொரு வகையாக போகம் உண்டு. அதன் பெயர், ஆடை, அணிமணி போகம். ஒருவன் போகி ஆனதும், முழுக்கத் துறந்து விடுவது இவற்றைத்தான்.
ஆனால், ரோகியாக, ரஜோவாக இருக்கும் போது முழுக்க ஆசை வைப்பது இவற்றில்தான். உலகத்தில் இருந்த மகா மேதைகள் எல்லாம் முதலில் நீக்கிய பற்று, ஆசை, அணிமணிகள் பற்று ஒன்றே. கண்கண்ட உதாரணம் காந்திஜி. ‘ஆயிரம் ரூபாய்க்கு ‘சூட்’ தைத்தால்தான் அழகாக இருக்கும்’ என்று நினைக்கிறோம். ஆனால், அந்த ஆயிரம் ரூபாயில் ஐந்து குடும்பங்கள் ஒரு மாதம் வாழும் என்பதை மறந்து விடுகிறோம். துல்லியமான கதர் அல்லது கைத்தறி வேட்டி சட்டை போதாதா, ஒரு இந்துவுக்கு? ஸ்ரீகாஞ்சிப் பெரியவர்களும், இதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் கைக்கடிகாரத்துக்குத் தங்கச் சங்கிலி போட ஆசைப்படுவேன். ஆனால் இப்பொழுதோ, தோல் வாரே போதும் என்று தோன்றுகிறது.
காலுக்குச் செருப்பு, காலைக் காக்கவா, பிறர் பார்க்கவா? அதில் எதற்குக் கண்ணாடி? எனக்குப் புரியவில்லை! ஒன்பது ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க ஒரு பெண் வந்தாள். மிகவும் வசதியான குடும்பத்துப் பெண். அவள் அணிந்திருந்த சேலையும், ரவிக்கையும் மொத்தம் ஐம்பது ரூபாய்தான் இருக்கும். அதில் அவள் ஜொலித்த ஜொலிப்பு என் கண்களை விட்டு நீங்கவேயில்லை.
இந்த போகங்கள் ஒரு கட்டத்தோடு முடிவடைந்து விடுகின்றன. இவற்றை அனுபவிக்க முடியாத நிலை வரும்போதே, தத்துவங்கள் புரிகின்றன. எழுபது வயதில் எதை நீங்கள் நேசிப்பீர்கள்? அமைதி! அமைதி! அமைதி! அதை இருபது வயதிலேயே நேசிக்கத் தொடங்கினால் உங்கள் போகத்துக்கு ஓர் அளவு வந்து விடும். காஞ்சிப் பெரியவர்களை நினையுங்கள். பரமஹம்சரை நினையுங்கள். விவேகானந்தரை நினையுங்கள். அளந்து வாழ்வதன் மூலம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வாரியார் சுவாமிகளை நினையுங்கள். ஏன்? அளவுக்கு மேல் அனுபவித்தால் என்ன என்று தோன்றுகிறதா? கொஞ்சம் என்னைப் பாருங்கள்.
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.
(தொடரும்)
