×

காருக்குள் இருந்து சடலம் மீட்பு மலையாள நடிகர் கொலையா: போலீசார் தீவிர விசாரணை

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் மலையாள டி.வி மற்றும் திரைப்பட நடிகர் வினோத் தாமஸ் (47), மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். காருக்குள் இருந்து அவருடைய சடலம் மீட்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கோட்டயம் அருகிலுள்ள மீனடம் பகுதியை சேர்ந்தவர், நடிகர் வினோத் தாமஸ். ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஒரு முறை வந்து பார்த்தாயா’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ஜூன்’, ‘அயாள் சசி’ உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மலையாள டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வினோத் தாமஸின் கார் கோட்டயம் பாம்பாடி அருகிலுள்ள மது பாரில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் வினோத் தாமஸ் இறந்து கிடந்தார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன், பாம்பாடி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிறகு வினோத் தாமஸ் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காருக்குள் தொடர்ந்து ஏசி இயக்கப்பட்டதால், அதிலிருந்து வெளியான விஷப்புகை மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் நிஜமான காரணம் என்னவென்று தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

 

The post காருக்குள் இருந்து சடலம் மீட்பு மலையாள நடிகர் கொலையா: போலீசார் தீவிர விசாரணை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiruvananthapuram ,Vinod Thomas ,Kottayam, Kerala ,Kottayam ,Kerala ,Kholiaya ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவனந்தபுரத்தில் 2 வயது குழந்தை கடத்தல்