×

ஆட்டோ டிரைவர் படுகொலை நெல்லை எஸ்ஐ, மனைவி மகன் உள்பட 6 பேர் கைது

மானூர்: நெல்லை மாவட்டம், அழகியபாண்டியபுரம் அருகே சுப்பையாபுரம் விநாயகர் கோயில் தொடர்பாக ஊர் மக்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதில் ஊர் மக்களுக்கு ஆதரவாக சுப்பையாபுரத்தைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் சசிகுமார் (42) இருந்துள்ளார். இதனிடையே ஊரில் இருதரப்புக்கும் இடையே கடந்த மார்ச் 27ம் தேதி தகராறு ஏற்பட்டது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த மாடசாமியின் மகனும், நெல்லை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்ஐயுமான அழகுபாண்டியன் (57) என்பருக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்று, கார் ஷெட் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சசிகுமார் உள்ளிட்ட 9 பேர் மீது மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் லோடு இறக்கிக் கொண்டிருந்த சசிக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.  புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். தனிப்படையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இதுதொடர்பாக நெல்லை எஸ்ஐ அழகுபாண்டியன், அவரது மனைவி ராஜம்மாள் (52), இவர்களது மகனும், ஆட்டோ டிரைவருமான பாலமுருகன் (29), பாளை திம்மராஜபுரத்தைச் சேர்ந்த உறவினர் அனிதா (36), அவரது கணவர் சிதம்பரக்குமார் (39), தாழையூத்தைச் சேர்ந்த சங்கர் (எ) சங்கரநாராயணன் (24) ஆகிய 6 பேரை தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். முன்னதாக கொலை சம்பவம் மற்றும் போலீசாரை கண்டித்து நேற்று முன்தினம் மானூர் மெயின் ரோட்டிற்கு திரண்டுவந்த சுப்பையாபுரம் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவும், சசிகுமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு அனைவரும் கலைந்துச் சென்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்ஐ அழகுபாண்டியனை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து சசிகுமாரின் உடலை உறவினர்கள்  பெற்றுக்கொண்டனர். …

The post ஆட்டோ டிரைவர் படுகொலை நெல்லை எஸ்ஐ, மனைவி மகன் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellie SI ,Manur ,Suppaiyapuram Vinayagar ,temple ,Ajayapandiapuram, Nellai district ,Nellai ,SI ,
× RELATED மானூர் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு