×

தீபாவளி ஸ்பெஷல் ஜப்பான், ஜிகர்தண்டா படங்களுக்கு சிறப்பு காட்சி: தமிழக அரசு அனுமதி

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் இன்று தீபாவளி ரிலீசாக திரைக்கு வருகிறது. குக்கூ, ஜிப்சி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி விமர்சன ரீதியாக பிரபலமான ராஜூ முருகன் ‘ஜப்பான்’ படத்தை இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதேநேரம், காமெடியிலும், ஆக்‌ஷனிலும் கார்த்தி அசத்துவதால் அவரது நடிப்பில் மற்றொருமொரு ஃபுல் என்டர்டெய்ன்மெண்ட் படமாக ‘ஜப்பான்’ பார்க்கப்படுகிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜப்பான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், பவா செல்லதுரை என பலர் நடித்துள்ளனர். இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தில் நிமிஷா சஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படமும் இன்று ரிலீசாகிறது. இந்நிலையில் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “தீபாவளியை ஒட்டி திரைக்கு வரும் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கு நவம்பர் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ஸ்டோன் பென்ச் கோரிக்கை விடுத்து வந்தது.

அதை ஏற்றுக்கொண்டு தீபாவளி பண்டிகைக்காக திரைக்கு வரும் இந்த படங்களுக்கு நவம்பர் 10ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இரவு 1.30 மணிக்குள் கடைசி காட்சி முடிய வேண்டும்” என தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதால் 2 படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது.

The post தீபாவளி ஸ்பெஷல் ஜப்பான், ஜிகர்தண்டா படங்களுக்கு சிறப்பு காட்சி: தமிழக அரசு அனுமதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Japan ,Diwali ,Raju Murugan ,Karthi ,Tamil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...