×

கிடா விமர்சனம்

பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று, ஏராளமான விருதுகள் வென்ற படமான இது, வரும் 11ம் தேதி திரைக்கு வருகிறது. தாத்தா செல்லையா (பூ ராமு), பெற்றோரை விபத்தில் இழந்த தனது பேரன் கதிருக்கு (தீபன்), தீபாவளியன்று அவன் விரும்பும் புத்தாடையை வாங்கிக் கொடுக்க ஆசை. ஆனால், அதற்குரிய பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. இதனால், குலசாமிக்கு நேர்ந்துவிட்டிருந்த கிடாயை விற்க தீர்மானிக்கிறார்.

அந்தக் கிடாயை உயிருக்குயிராக நேசிக்கும் கதிர், தனக்கு புத்தாடை வேண்டாம். கிடாதான் வேண்டும். அதை விற்க வேண்டாம் என்று சொல்கிறான். அந்த ஊரிலுள்ள பாயின் மட்டன் கடையில் வேலை பார்க்கும் வெள்ளைச்சாமிக்கும் (காளி வெங்கட்), கடை முதலாளி மகனுக்கும் சிறிய மோதல் ஏற்படுகிறது. தீபாவளி அன்று தனி மட்டன் கடை போடுவதாக என்று சவால் விட்டு கிளம்பும் காளி வெங்கட்டிடம், கடை வைப்பதற்கான பணம் இல்லை. எனவே, செல்லையாவின் கிடாவை வாங்கி கடை தொடங்க முடிவு செய்கிறார். இந்நிலையில், திடீரென்று கிடா திருட்டு போகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

யதார்த்தமான கதை மற்றும் காட்சிகளின் மூலமாக, ஏழை எளிய மக்களின் தீபாவளி காலத்தை படமாக்கியுள்ளார், இயக்குனர் ரா.வெங்கட். கிராமத்து மனிதர்களுக்குள் இருக்கும் ஈரத்தையும், ெவப்பத்தையும் குறுக்குவெட்டு தோற்றத்தில் படம் பதிவு செய்கிறது. (மறைந்த) பூ ராமு, காளி வெங்கட், தீபன், பாண்டியம்மா, விஜயா உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர்.

திருப்பம், சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக எதையும் திணிக்காமல், முழு படத்தையும் இயல்பாகவும், பாசிட்டிவ்வாகவும் வழங்கி இருக்கின்றனர். ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவும், தீசன் பின்னணி இசையும் உணர்வுகளை ஆடியன்சுக்கு கடத்தி இருக்கிறது. தீபாவளி பட்டாசு சத்தத்திற்கு இடையில், சின்னதாக வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த கம்பி மத்தாப்பு.

The post கிடா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Selaiah ,Boo Ramu ,Kathru ,Dipan ,Diwali ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி