×

32 குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தமிழக அரசு பதில் தர கால அவகாசம்: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வக்கீல் ஆர்.கே.அய்யப்பன் தாக்கல் செய்திருந்த மனுவில், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 32 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்துக்கு உட்பட்ட நெடும்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்த குளங்களை நம்பியே சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு போலியாக வரி செலுத்திய ரசீது தயாரித்து மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாருர் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருத்துறைப்பூண்டி தாசில்தார் குளங்கள் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு விபரங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட 13 குளங்கள் அளவிடப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 19 குளங்கள் அருகில் நஞ்சை நிலங்களில் பயிர்கள் உள்ளதால் அறுவடைக்கு பிறகு அந்த குளங்கள் தொடர்பான எல்லையை அளவீடு செய்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு குறித்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post 32 குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தமிழக அரசு பதில் தர கால அவகாசம்: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,RK Ayyappan ,Tiruthuraipoondi, Tiruvarur district ,Chennai High Court ,Tiruthuraipoondi ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...