×

உள்கட்சி தேர்தலில் இலை கட்சி தலைமை மீது அதிருப்தி ஆரம்பமான கதையை சொல்கிறார் wiki யானந்தா

‘‘உள்ளாட்சி தேர்தலிலேயே கட்சி தொண்டர்கள் தலைமையை மதிக்கல… அதே பாணியை உள்கட்சி ேதர்தலிலும் இலை கட்சி நிர்வாகிகள் இருப்பதால் தலைமை அதிருப்தியில இருக்காமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை  கட்சியின் அமைப்பு தேர்தல் 2 கட்டங்களாக 15 மாவட்டங்களுக்கு நடத்தி  முடிச்சுட்டாங்க. இதில் ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்  பதவிகளுக்கு போட்டியிட ஆள் இல்லாததால் பழைய ஆட்களுக்கே மீண்டும் பதவி கொடுத்து இருக்காங்களாம். இதேபோல தான் மாநிலம் முழுவதும் நிலவரம் இருக்காம். அதை உறுதி செய்வதைப்போல, மனுநீதிசோழன் மாவட்டத்தில் 20 ஒன்றிய  செயலாளர்கள், 4 நகர செயலாளர்கள் மற்றும் 7 பேரூர் கழக செயலாளர்கள் என  அனைத்துக்குமே ஏற்கனவே பொறுப்பாளர்களாக இருந்து வந்தவர்களே மீண்டும்  பதவிக்கு வந்து இருக்காங்களாம். தேர்தல் என்று சொல்லி விட்டு மீண்டும்  பழைய ஆட்களையே நியமனம் செய்கிறார்கள்… இது தேர்தலா… உள்குத்து விளையாட்டா எங்களை கிள்ளுகீரையா கட்சி தலைமை நினைக்கிறதா என்று ஏகத்துக்கும் தலைமை மேல கொந்தளிப்பாக இருக்காங்களாம். மனுநீதிசோழன் மாவட்ட இலை கட்சி தொண்டர்கள் தான் தலைமையை கடுமையா ‘வையறாங்களாம்’.  சின்ன மம்மியின் ஆதரவாளர்கள்  பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த டெக்னிக்கை தலைமை  கையாண்டுள்ளது.இப்படியே போனால், மனுநீதி சோழன் மாவட்டத்தில் இலை  கட்சியே இல்லாமல் போய் விடும். எப்படியாவது பதவி கிடைத்து விடும் என  ஆண்டாண்டு காலமாக நம்பி இருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம் தான்  மிஞ்சியதாம். இனியும் இலைகட்சியை நம்பி இருந்தால் நடுத்தெருவுக்கு தான்  வரவேண்டியது இருக்கும். அதிருப்தியை சமாளிக்க தலைமை என்ன செய்தாலும்  தொண்டர்களை இனி சமரசம் செய்ய முடியாது. தலைமையை திட்டி தீர்க்கும்  தொண்டர்கள். ஒன்று மாற்று கட்சிக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால்,  கட்சியில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கிவிட வேண்டும் என தொண்டர்களுக்குள்  பேச தொடங்கி விட்டார்களாம்… இந்த விஷயம் தலைமையின் காதுக்கு போச்சாம்… கொஞ்ச நாள்ல இதெல்லாம் சரியாகிவிடும் பெரிசு பண்ணாதீங்க என்று நியமன நிர்வாகிகள் கிட்ட சொல்லியிருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ கிரிவலம் மாவட்டத்துல வெயில விட… வாக்கி டாக்கி சத்தம் கேட்டால்தான், காக்கிகள் அலறுகிறார்களாமே…’’ என்று விசாரித்தார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல கலசத்துல தொடங்கி பாக்கம்னு முடியுற பெயர் கொண்ட காவல்நிலையம் இருக்குது. இந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள்ல சாராயம், கஞ்சா விற்பனை அமோகமாக நடக்குதாம். இதுல குறிப்பா சொல்லணும்னா, அந்த லிமிட்ல இருக்குற பிரசித்தி பெற்ற மலை அடிவாரத்துல கஞ்சா விற்பனை அதிகளவுல நடக்குதாம். அந்த லிமிட்ல பல்வேறு பகுதிகள்ல கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருக்குதாம். இந்த விஷயம் மாவட்ட தலைமை காக்கியோட காதுக்கு போயிருக்குது. இதனால, டென்ஷன் ஆன மாவட்ட தலைமை காக்கி, வாக்கி, டாக்கியில போயி, கடமை உணர்வோட பணியாற்றணும், கஞ்சா வியாபாரிங்களை கைது செஞ்சி நடவடிக்கை எடுக்கலைன்னா கூண்டோட டிரான்ஸ்பர் செஞ்சிடுவேன்னு வறுத்தெடுத்திருக்காராம். இதனால, காக்கிங்க, டிரான்ஸ்பர் பயத்துல இருக்காங்களாம். டிரான்ஸ்பருக்கு பயப்படுற காக்கிங்க கஞ்சா விற்பனையை தடுக்குறாங்களான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘எரிமலையான மாங்கனி காக்கி அதிகாரியை ‘கூல்’ படுத்திய மருத்துவர்களை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாநகரத்துல உச்சஅதிகாரி ஒருவரது பெயர் உயர்ந்த பதக்கம் பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற்றிருக்காம். இதனால் மெடிக்கல் செக்கப் செஞ்சி சான்றிதழை அனுப்புங்கன்னு தலைமையில் இருந்து தகவல் வந்துச்சாம். இதுபோன்ற மெடிக்கல் செக்கப் எல்லாம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலதான் பண்ணனுமாம். ஆனா பாருங்க அந்த உச்ச அதிகாரிக்கு அங்கு போக மனசில்லையாம். இதனால பிரைவேட் மெடிக்கலுக்கு போய் செக்கப் செஞ்சிருக்காரு. ஆனா சர்க்கார் மருத்துவமனையில செக்கப் செஞ்சது போன்று கையெழுத்து வாங்கிட்டுவாங்கன்னு கீழ் அதிகாரிகளிடம் சொல்லி அனுப்பியிருக்காரு.எள்ளுன்னா எண்ணையாகும் ஆபீசர்ஸ் சான்றிதழை தூக்கிக்கிட்டு ஓடியிருக்காங்க. ஆனா அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளோ, நோ சொல்லிட்டாங்களாம். யாராக இருந்தாலும் வந்தாத்தான் கையெழுத்து போட்டுத் தருவோம்ன்னு ஸ்ட்ராங்கா இருந்துட்டாங்களாம். மன்றாடிக் கேட்டும் மசியலையாம். இதுபற்றி அந்த அதிகாரிகிட்ட சொல்லியிருக்காங்க. இதை கேட்டதும் அந்த அதிகாரி எரிமலையாயிட்டாராம். பதக்கம் முக்கியமுன்னு தன்னை சாந்தப்படுத்திக்கிட்டு, அந்த அதிகாரி, ஆஸ்பத்திரிக்கு போனாராம். இவரது டென்சனை பார்த்த டாக்டர்கள் ரொம்பவுமே பயந்து போயிட்டாங்களாம். ஒவ்வொரு துறையின் முக்கியமான டாக்டர்களை ஒரே இடத்துக்கு வரவழைச்சு செக்கப் செஞ்சி அனுப்பினாங்களாம். இதனால ரொம்பவே கூலான அந்த காக்கி உயரதிகாரி மருத்துவர்களை பாராட்டிவிட்டு சென்றுவிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post உள்கட்சி தேர்தலில் இலை கட்சி தலைமை மீது அதிருப்தி ஆரம்பமான கதையை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Wiki Yananda ,Leaf party ,
× RELATED மொத்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜ...