×

மக்களவை தேர்தல் சொத்து கணக்கை மறைத்தார் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்: உயர் நீதிமன்றத்தில் தங்க தமிழ்செல்வன் சாட்சியம்

சென்னை: தேனி தொகுதியில் ரவீந்திரநாத்குமார் வெற்றி  செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் வங்கியில் பெற்ற ரூ. 10 கோடி கடன் மற்றும் சொத்து விவரங்களை மறைத்து, பொய்யான தேர்தல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றார். அவருடைய வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணையில் உள்ளது. தங்க தமிழ்செல்வன் இந்த வழக்கில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சார்பில் வழக்கறிஞர் வி.அருண், ரவீந்திரநாத் சார்பில் வழக்கறிஞர்கள் கௌதம், ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகினர். தங்கத்தமிழ் செல்வனிடம் ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர் கௌதம் குறுக்கு விசாரணை நடத்தினார். அதற்கு தங்க தமிழ்செல்வன் பதில் கூறும்போது, தேர்தலின்போது ரவீந்திரநாத் தான் வாங்கி பதிவு செய்த சொத்துக்களையும், வங்கியில் பெற்ற ரூ.10 கோடி கடனையும் மறைத்து வேட்பு தாக்கல் செய்தார். இது குறித்து அதே தொகுதி வேட்பாளர் என்ற முறையில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தி எனது புகாரை ஏற்காமல் நிராகரித்துவிட்டனர். உரிய ஆவணங்களுடன்தான் புகார் கொடுத்தேன். அந்த முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்த போது துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புகாரை ஏற்றுக்கொள்வதை தடுத்துவிட்டார். அவர் சொத்து கணக்கை முறையாக சமர்பிக்கவில்லை என்றும், அதை நீதிமன்றத்தில் நீதி பெறுவதற்காகத்தான் சாட்சியம் அளிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நிறுவனங்கள் பதிவாளரின் சாட்சியத்திற்காக வழக்கை நீதிபதி ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

The post மக்களவை தேர்தல் சொத்து கணக்கை மறைத்தார் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்: உயர் நீதிமன்றத்தில் தங்க தமிழ்செல்வன் சாட்சியம் appeared first on Dinakaran.

Tags : OPS ,Rabindranath ,Lok Sabha ,Thanga Tamilselvan ,Chennai ,Milani ,Rabindranath Kumar ,Theni ,
× RELATED 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58...