×

இலங்கையில் அமைச்சரவை விரிவாக்கம் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு: ராஜபக்சே குடும்பத்தினர் இல்லை

கொழும்பு: இலங்கையில் 17 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதில், பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர அவரது குடும்பத்தினர் வேறு யாருக்கும் பதவி தரப்படவில்லை. இலங்கையில், அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று இரவு,பகல் என பாராமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் , கூட்டணிக்கட்சிகளும் சேர்ந்து போர்க்கொடி தூக்கியுள்ளன.  கடந்த 3 ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர,  அவரது அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சிமுறைக்கு அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை. அதேநேரம் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து 4ம் தேதி நிதி, வெளிவிவகாரம், கல்வி மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கு 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்பதற்காக சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) ரூ.30 ஆயிரம் கோடி நிதிஉதவி பெற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு  சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று புதிதாக 17 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமலவீர திசாநாயக-வனத்துறை, மோகன், பிரியதர்ஷ்ன டி சில்வா – குடிநீர் வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, சமல் ராஜபக்சே உள்ளிட்டவர்கள் இடம் பெறவில்லை. தற்போது ராஜபக்சே குடும்பத்தில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே மட்டுமே பதவி வகிக்கின்றனர். விரைவில் இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.* பெட்ரோல் விலை ரூ.362 ஆக உயர்வுஇலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது. ஒரே நாளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.35 உயர்ந்து ரூ.362 ஆகவும். டீசல் லிட்டர் ரூ.75 உயர்ந்து ரூ.327 ஆகவும் அதிகரித்து உள்ளது. இது மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post இலங்கையில் அமைச்சரவை விரிவாக்கம் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு: ராஜபக்சே குடும்பத்தினர் இல்லை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rajapakse ,Colombo ,Mahinda Rajapakse ,
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அனுப்பியவர் இலங்கையில் கைது