×

முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஓயாத ஏவுகணை தாக்குதல்: உயிரா? போரா? உக்ரைன் வீரர்கள் 2,500 பேர் சரணடைய கெடு

கீவ்: உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்கள் தொடர்கிறது. மரியுபோலில் முக்கிய இரும்பு தொழிற்சாலையை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம், அங்கிருந்த 2,500 உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்தால், உயிர் பிச்சை போடுவதாக கெடு விதித்துள்ளது. நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், இர்பின், செர்னிவ், புச்சா, மரியுபோல், லிலிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் தாக்குதல் நடத்தி இனப் படுகொலை, பலாத்காரம், சித்ரவதை போன்ற போர் குற்றங்களில் ரஷ்ய படைகள் ஈடுபட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. இதற்கு சாட்சியாக மேற்கண்ட நகரங்களில் உள்ள சாலைகள், குழிகளில் கொத்துக் கொத்தாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. கீவ், புச்சா, மரியுபோல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரஷ்ய படைகள் வெளியேறிய பிறகு சுமார் 2000க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட சில நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெற்றதால், அங்குள்ள மக்கள் மீண்டும் உயிர் கிடைத்ததுபோல் பெரும் மூச்சு விட்டனர். இது, சில நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை. இந்த சூழலில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கிளச்சியாளர்கள் வசிக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற திட்டமிட்டு, அங்கு பெரும் படைகளை குவித்து திடீர் தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் நடத்தியது. அமெரிக்கா, நேட்டோ உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுத உதவியால் உக்ரைன் நடத்திய அதிரடி தாக்குதலால் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா நுழைய முடியாமல் திணறி பின்வாங்கியது. இந்த ஆக்ரோஷம் கிழக்கு உக்ரைனிலும் தொடர்ந்தது. இந்நிலையில், உக்ரைன் ஏவுகணை வீச்சில் கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பல் அழிக்கப்பட்டது. மேலும், ரஷ்யா எல்லைகள் புகுந்து உக்ரைன் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குடியிருப்புகள் மீது சரமாரி குண்டு வீசப்பட்டது. இந்த இரு தாக்குதல்களால் ஆத்திரமடைந்த ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அனைத்து முக்கிய நகரங்களின் மீதும் மீண்டும் ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருக்கிறது.  அதன்படி, கடந்த 2 நாட்களாக தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு உக்ரைனில் உள்ள 8 முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், பல இடங்களில் மக்கள் தூக்கத்தை தொலைத்து, ஒவ்வொரு முறை குண்டு சத்தங்கள் கேட்கும் போதெல்லாம் உயிரை கையில் பிடித்து கொண்டு பாதுகாப்பான இடத்தை தேடி நகருகின்றனர். அவ்வாறு செல்லும் அப்பாவி மக்களையும் ரஷ்யா படைகள் சுட்டுக் கொல்கின்றன. இதனால், பள்ளி கூடங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ ஆலை, வெடிமருந்து ஆலை எண்ணெய் ஆலை வெடித்து சிதறி தீப்பிடித்து எரிகின்றன.  கார்கிவ் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீசப்பட்ட ராக்கெட்டுகளால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் இறந்தனர். கீவ்வின் டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ராணுவ கவச வாகனங்கள் ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகள் வழங்கிய நீண்ட தூர இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் கிழக்கில் முன்னேறும் ரஷ்யாவுக்கு பலமாக அமைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பி கொண்டிருந்ததால், கீவ்வில் வெளிநாட்டு தூதரகங்கள் மீண்டும் திறக்க திட்டமிட்டனர். ஆனால், ரஷ்ய படைகள் அதிரடி தாக்குதலால் திட்டத்தை கைவிட்டனர். மேற்கு உக்ரைனில் உள்ள எல்விவ் பிராந்தியத்தில் பெலாரஸில் இருந்து புறப்பட்ட ரஷ்ய எஸ்யு-35 விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. கார்கிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சமூக  சமையலறையை அழிக்கப்பட்டது. இங்கிருந்துதான் சுமார் 30 நகரங்களில் உள்ள 3  லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. ரஷ்ய விமானத் தாக்குதல்களில் கிழக்கில் சீவிரோடோனெட்ஸ்க் அருகே உக்ரைனின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள பல  வெடிமருந்து கிடங்குகளையும் அழிக்கப்பட்டது. 2 நாட்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் நூற்றுக்காணக்கானோர் பலியும், காயமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றினால், டான்பாஸ் பகுதியில் ஏற்கனவே உள்ள வீரர்களுடன் இணைந்து முழுமையான தாக்குதலை நடத்த முடியும் என்று ரஷ்யா கருதுகிறது. இதனால் மரியுபோல் மீது இடைவிடாமல் தாக்குதல்  நடத்தி வருகிறது. உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையை ரஷ்ய படைகள் சுற்றிவளைத்துள்ளன. இங்கு சுமார் 2,500 உக்ரைன் வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தால், உயிர் பிச்சை அளிப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த நகரம் எந்த நேரத்திலும் ரஷ்யாவிடம் வீழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இருந்த மரியுபோலில் தற்போது வெறும் ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களையும் விடாமல் சுட்டு கொல்ல ரஷ்ய ராணுவம் முயற்சித்து வருவதாக உக்ரைம் குற்றம்சாட்டி உள்ளது.   * ரஷ்ய தளபதி பலி மரியுபோலில் நடந்த சண்டையில் ரஷ்யாவின் 8வது ராணுவ பிரிவின் துணைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் விளாடிமிர் ப்ரோலோவ் உயிரிழந்தார். இவரது உடல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. போரில் இதுவரை பல ரஷ்ய தளபதிகள், 12க்கும் மேற்பட்ட பிற உயரதிகாரிகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.* ஈஸ்டர் போர் நிறுத்தம் போப் பிரான்சிஸ் அழைப்பு வடிகானில்  உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடந்த ஈஸ்டர் பிரார்த்தனையில்  உக்ரைனின் மெலிடோபோல் மேயர் மற்றும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். இதில் பேசிய போப் பிரான்சிஸ், ‘ஒரு ஈஸ்டர் போர்நிறுத்தம்,  பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை அடைய வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார்.* மக்களை கொல்றாங்க… ஆயுதங்களை கொடுங்க…உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்ற நிலையில் உள்ளது. ரஷ்யா வேண்டுமென்றே அங்குள்ள அனைவரையும் அழிக்க முயற்சிக்கிறது. மரியுபோலை காப்பாற்ற உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் கூடுதல் ஆதரவு தேவை. எங்களுக்கு தேவையான கனரக ஆயுதங்கள், விமானங்களை உடனடியாக வழங்குங்கள். இதன்மூலம், மரியுபோல் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் அழுத்தத்தை குறைக்கலாம். படையெடுப்பை உடைக்கலாம்,’ என்றார்.* ரஷ்ய கப்பல்களுக்கு கருங்கடலில் தடை ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யக் கொடியுடன் கூடிய கப்பல்கள் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைவதை பல்கேரியா அரசு தடை விதித்துள்ளது. ஆபத்தில் இருக்கும் கப்பல்கள் அல்லது மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள் அல்லது எரிசக்தி பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. …

The post முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஓயாத ஏவுகணை தாக்குதல்: உயிரா? போரா? உக்ரைன் வீரர்கள் 2,500 பேர் சரணடைய கெடு appeared first on Dinakaran.

Tags : Russia ,Kiev ,Ukraine ,Mariupol ,Dinakaran ,
× RELATED உக்ரைன் மீது தாக்குதலை...