×

மோடிக்கு பாக். பிரதமர் பதில் கடிதம் இந்தியாவுடன் அமைதியான உறவையே விரும்புகிறோம்: இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

புதுடெல்லி: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள பதில் கடிதத்தில், இந்தியாவுடன் அமைதியான உறவையே விரும்புவதாகவும், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். அவருக்கு கடந்த 11ம் தேதி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தீவிரவாதம் இல்லாத, அமைதியான, ஸ்திரத்தன்மை கொண்ட பிராந்தியத்தையே இந்தியா விரும்புவதாக தெரிவித்தார். பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமருக்கு, மோடி எழுதிய கடிதத்தில், பாகிஸ்தானுடன் இந்தியா ஆக்கப்பூர்வமான உறவை விரும்புவதாக குறிப்பிட்டார்.பிரதமர் மோடியின் டிவிட்டர் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்திருந்த ஷெபாஸ் ஷெரீப், தற்போது பிரதமர் மோடிக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ‘இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வு காண்பது இன்றியமையாதது. இதற்காக அர்த்தமுள்ள இருதரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் செய்த தியாகங்கள் அனைவரும் அறிந்ததே. நம் மக்களின் அமைதியை பாதுகாப்போம். சமூக பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்,’ என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ல் புல்வாமா தாக்குதலுக்கு  பிறகும் காஷ்மீர் சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்ட விவகாரத்திலும் இருதரப்பு உறவு பாதித்தது. தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்தியா, பாகிஸ்தான் உறவு மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post மோடிக்கு பாக். பிரதமர் பதில் கடிதம் இந்தியாவுடன் அமைதியான உறவையே விரும்புகிறோம்: இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Pak ,Modi ,India ,New Delhi ,Pakistan ,Shahbaz Sharif ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…