*5 டன் நாசம்; விவசாயி கவலைசத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைகிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் புகுந்து வாழை, கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. தாளவாடி மலைப்பகுதி சோளகர் தொட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, அப்பகுதியில் உள்ள விவசாயி சுரேஷ் (42), என்பவருக்கு சொந்தமான விளை நிலத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த முட்டை கோஸ்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.சத்தம் கேட்டு சுரேஷ் மற்றும் விவசாயிகள் எழுந்து பார்த்தபோது யானை புகுந்திருப்பதை அறிந்தனர். இதனையடுத்து பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் விரட்டினார். ஆனால், யானை அங்கிருந்து செல்லாமல் போக்கு காட்டியது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். பின்னர், யானை புகுந்த தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தபோது சுமார் 5 டன் முட்டை கோஸ்களை யானை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியிருப்பது தெரியவந்தது. காட்டு யானை விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும்போது வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வருவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post தாளவாடியில் அறுவடைக்கு தயாரான முட்டைகோஸ் தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் appeared first on Dinakaran.
