×

ரூ.364 கோடியில் செவிலியர் கண்காணிப்பு மையம், உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.364.22 கோடி செலவில் 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ரூ.65 கோடி செலவில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் ரூ.266.73 கோடி மதிப்பீட்டில், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார அளவில் உள்ள 139 அரசு மருத்துவமனைகளில் அமைந்துள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முக்கிய உடலியக்க செயல்பாடுகள், மருத்துவ தரவுகள் வாயிலாக, நேரடியாக செவிலியர் கட்டுப்பாட்டு மையத்திலுள்ள கண்காணிப்பு திரையில் காட்சிப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.இதன் மூலம் அனைத்து படுக்கையில் உள்ள நோயாளிகளின் உடலியக்க நிலையை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கண்காணிக்கும் இப்புதிய முறை வாயிலாக மனித உயிர்கள் காப்பாற்றப்படும். மேலும், 25 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.2.27 கோடி வீதம், மொத்தம் ரூ.97.49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளை முதல்வர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி அருகில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் ரூ.65 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இச்சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், இயற்கை மருத்துவ சிகிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகா கிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். மேலும், மருத்துவ கல்வி இயக்ககத்தின் சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.30.09 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நூலக கட்டடம், விடுதி கட்டடம், தேர்வு கூடம் மற்றும் சீமாங்  கட்டடம், தாம்பரம் – அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் ரூ.2.66 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன சமையலறை, உதகமண்டலம் – அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பள்ளி, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.62 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டடங்கள், பயிற்சி மருத்துவர் குடியிருப்புகள், உள்ளிருப்பு மருத்துவர் குடியிருப்பு கட்டடம், நோய் குறியியல் கூடுதல் செயல் விளக்க கட்டடம் மற்றும் பிணஅறுவை மற்றும் ஆராய்ச்சி கட்டடம்,  காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.87 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் அறை மற்றும் சாய்தள வசதி; பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கியில் ரூ.1.12 கோடியில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவ பணிகள் அலுவலக கட்டடம், புதுக்கோட்டையில் ரூ.1.23 கோடியில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவ பணிகள் அலுவலக கட்டடம், திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடி மற்றும் திருவாலங்காடு ஆகிய இடங்களில் ரூ.2.55 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், களப்பால் மற்றும் குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.2.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  புறநோயாளிகள் பிரிவு கட்டடம், திருவண்ணாமலை மாவட்டம், நம்மியம்பட்டில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் என ரூ.124 கோடியே 97 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக 108 இலவச அவசரகால ஊர்தி சேவையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு மாதிரி வழித்தடத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.5.34 கோடி மதிப்பீட்டில் 20 எண்ணிக்கையிலான 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post ரூ.364 கோடியில் செவிலியர் கண்காணிப்பு மையம், உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Nurse Monitoring Centre ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...