×

தி லிட்டில் மெர்மெய்ட் (ஆங்கிலம்)

டிஷ்னி நிறுவனம் தனது புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை லைவ் ஆக்‌ஷன் படங்களாக தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. ஏழு கடல்களின் ராஜாவுக்கு நான்கைந்து மகள்கள். அவர்களைக் கொண்டுதான் அவர் கடலை ஆள்கிறார். அதில் கடைசி செல்ல மகள் ஏரியல். இனிமையாகப் பாடும் திறன் கொண்ட அவரை தந்தைக்கு மிகவும் பிடிக்கும். கடல்வாசிகள் யாரும் நிலத்தில் வாழும் மனிதர்களுடன் தொடர்புகொள்ளக்கூடாது என்ற கடுமையான விதி இருக்கும் சூழ்நிலையில், ஏரியல் ஒரு மனிதனைக் காதலிக்கிறாள். கடற்புயலில் சிக்கிய கப்பலில் இருந்து, கடலில் விழுந்து தவிக்கும் இளவரசனைக் காப்பாற்றி கரை சேர்க்கிறார் ஏரியல்.

அவனைக் கண்டவுடனே காதல் கொள்கிறாள். அவனுடனேயே வாழ வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால், கடலில் வாழ்வதைப் போல் உடலமைப்பை மாற்றி, கால்கள் இருக்கும் மனித உருவத்துக்கு மாற வேண்டும். கடலிலுள்ள சூனியக்காரி, ‘உன்னை மனிதர்களைப் போல் மாற்றுகிறேன். அதற்குப் பதிலாக, நீ உன் குரல் வளத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று சொல்கிறாள். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் அவள், பிறகு தனது குரலைக் கொடுத்து கால்களைப் பெற்று நிலத்துக்கு வருகிறாள். ஏரியல் தன் காதலனைக் கண்டுபிடித்தாளா, அவனுடன் வாழ்ந்தாளா? மீண்டும் கடலுக்கே திரும்பினாளா என்பது கதை. உலகம் முழுவதும் புகழ்பெற்ற கதை இது.

கண்ணைக் கவரும் கிராபிக்ஸ் காட்சிகள், காதுக்கு இனிமையான பாடல்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமாகக் கொடுத்துள்ளார் இயக்குனர் ரோப் மார்ஷல். கடல் இளவரசியாக பிரபல பாடகி ஹலே பிலாய் நடித்துள்ளார். நிஜத்திலும் அவர் பாடகி என்பதால், காதலை மனமுருகப் பாடி நடித்துள்ளார். இளவரசனாக ஜொனா ஹவுர் கிங், சூனியக்காரியாக மெலிசா நடித்துள்ளனர். கடந்த மே மாதம் தியேட்டர்களில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இப்படம், தற்போது டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசிக்க வேண்டிய படம்.

The post தி லிட்டில் மெர்மெய்ட் (ஆங்கிலம்) appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Disney ,King ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்