×

நோயை விட மற்றவர்களின் இரக்கம் கொடுமையானது: மம்தா மோகன்தாஸ்

விதார்த், டெல்னா டேவிஸ், பாரதிராஜா நடித்த ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தை இயக்கியவர், நித்திலன். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம், ‘மகாராஜா’. இது விஜய் சேதுபதியின் 50வது படம். ஹீரோயினாக மம்தா ேமாகன்தாஸ் நடித்துள்ளார். இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவரிடம் பேசினோம். ‘‘மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளேன். ‘மகாராஜா’ விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ‘நான் மம்தா மோகன்தாஸின் நடிப்புக்கு மாபெரும் ரசிகன்’ என்று புகழ்ந்தார். கடந்த 18 வருடங்களில் பல மொழிப் படங்களில் நான் நடித்திருந்தாலும், பிரபலமான ஒரு ஹீரோ மேடையில் நின்று இவ்வாறு என்னைப் புகழ்ந்தது இதுதான் முதல்முறை.

இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றி. இது அவரது பெருந்தன்மை. நானும் அவரது தீவிர ரசிகைதான். ‘மகாராஜா’ படத்தில் ஒரு சிறுமி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறாள். அவள் தன் தாயை இழந்தவள். அவளது வாழ்க்கைக்கு வழிகாட்டி மாதிரியும், பாசமுள்ள சகோதரி மாதிரியும் நான் வருகிறேன். கதைக்கு நானும் திருப்புமுனையாக இருப்பேன். விஜய் சேதுபதிக்கு ஜோடியா என்று கேட்காதீர்கள். விஜய் சேதுபதி ஒரு நடிப்பு ராட்சசன். கேமராவுக்குப் பின்னாலும், முன்னாலும் வெவ்வேறு மாதிரி இருப்பார். அவரது வசன உச்சரிப்பு மற்றும் வித்தியாசமான பாடிலாங்குவேஜை உன்னிப்பாக கவனிப்பேன். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் அவரது மாறுபட்ட நடிப்பு என்னை வியக்க வைத்தது.

‘சீதக்காதி’ படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். இப்போது ‘மகாராஜா’ படத்தில் அவருடன் நடித்துள்ளேன். கதையிலுள்ள கேரக்டராகவே மாறும் தந்திரம் வேறு யாருக்கும் வராது. மவுனமாக இருந்தாலும் நடித்து அசத்திவிடுவார். இப்படத்தில் நடித்தபோது, விஜய் சேதுபதியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அவரது ஷாட் முடிந்ததும் ஜாலியாக சிரித்துப் பேசுவார். ‘ஷாட் ரெடி’ என்றால், நடிப்பு எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. ‘மெத்தட் ஆக்டிங்’ என்ற வித்தை எனக்கும் அடிக்கடி வரும். கேரக்டரை நன்கு புரிந்துகொண்டு, அதன் ஆழம் எதுவென்று தெரிந்து, அதுவரை சென்று நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதனால்தான் எனது கேரக்டர்களை அதிக கவனத்துடன் தேர்வு செய்து நடிக்கிறேன். நான் எப்போதுமே சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் எதில் கிடைக்கிறதோ, அதுதான் எனக்கு மிகவும் பிடித்த படம். ஹீரோ யார்? எனக்கு எவ்வளவு சம்பளம் என்று யோசிக்க மாட்டேன். எனது திறமையை வெளிப்படுத்தும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன். நான் தேர்வு செய்து நடிக்கும் படம் பெரிய வெற்றிபெறும்போது, எனது செலக்‌ஷன் அபாரம் என்று என்னை நானே பாராட்டிக்கொள்வேன். பல மொழிப் படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு இந்த மொழிப் படம்தான் பிடிக்கும் என்று சொல்ல மாட்டேன்.

உணர்வுகள் என்பது அனைத்து மொழியிலும் ஒன்றுதான். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில், நீதிபதி பாரதிராஜாவின் கைவிடப்பட்ட மகள் கேரக்டரில் நான்தான் நடித்திருக்க வேண்டும். பிறகு அதிதி பாலன் நடித்தார். கதையும், கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த கேரக்டரில் மலையாளத்திலும், தமிழிலும் நான் நடித்ததில்லை. எனக்கான வசனங்களை மனப்பாடம் செய்து, மூன்று முறை கால்ஷீட் தந்தேன். அப்போது பாரதிராஜாவுக்கு உடல்நிலை பாதித்தது. அப்போது நான் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளிநாடு செல்ல தயாரானபோது தங்கர் பச்சான் பேசினார். ஆனால், என் குடும்பத்தின் மகிழ்ச்சியே முக்கியம் என்று முடிவு செய்தேன்.

எனவேதான் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ‘இறைவன்’ என்ற படத்தில் பாட யுவன் சங்கர் ராஜா என்னை சென்னைக்கு அழைத்தார். அப்போது நான் ஐரோப்பாவில் இருந்ததால் வர முடியவில்லை. என் உடல்நிலை பற்றிய கேள்விக்கு வருகிறேன். எப்போதுமே நாம் கடந்த கால வலிகளை மனதில் சுமந்து நிகழ்கால விஷயங்களில் இருந்து விலகி இருப்போம். என் உடல்நிலை பாதித்தது முதல் இன்றுவரை பல விஷயங்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது என்பது, எனது முந்தைய உடல்நிலை மற்றும் தோற்றத்துடன் மீண்டு வர முடியாது என்ற உண்மையுடன் சம்பந்தப்பட்டது.

கடுமையான நோயை எதிர்த்து வீரத்துடன் போரிட்டேன். அப்போது நோய் என்னைப் பார்த்து பயந்தது. இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று, எனக்கு ஏற்பட்ட கடுமையான வலியைப் புறக்கணித்துவிட்டு, அதுபற்றி வெளியே பேசினேன். உடனே அனைவரது பார்வையும் வேறுமாதிரி மாறியது. சில நடிகைகளின் மேனேஜர்கள், ‘அச்சச்சோ… மம்தா ெராம்ப பாவம்’ என்று சொல்லிச்சொல்லி, எனக்கு வந்த புதுப்பட வாய்ப்பை அவர்கள் பக்கம் திருப்பிவிட்டனர். அவர்கள் உள்பட சிலர் என்மீது காட்டிய இரக்கம், எனக்கு ஏற்பட்ட நோயைவிட மிகவும் கொடுமையானது. எனது பெற்றோர் மட்டுமே எனக்கான ஆதரவைக் கொடுத்தனர். மீண்டு வந்து விட்டேன். மீண்டும் வந்துவிட்டேன். தொடர்ந்து எனது படங்கள் வெளியாகும். ரசிகர்களை மகிழ்விப்பது எங்களைப் போன்ற நட்சத்திரங்களின் கடமை’’.

The post நோயை விட மற்றவர்களின் இரக்கம் கொடுமையானது: மம்தா மோகன்தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mamata Mohandas ,Nithilan ,Vidharth ,Delna Davis ,Bharathiraja ,Vijay Sethupathi ,Mamta Yemagandas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்