×

உக்ரைன் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தொழிலதிபர், எம்பி உள்ளிட்ட 3 பேரின் உடலில் விஷம்..!

* உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட்* அமெரிக்காவிற்குள் நுழைந்த 35 ரஷ்யர்கள் அதிரடி கைதுகீவ்: உக்ரைன் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தொழிலதிபர், எம்பி உள்ளிட்ட 3 பேரின் உடலில் விஷத்தன்மை உள்ளதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவிற்குள் நுழைந்த 35 ரஷ்யர்கள் அந்நாட்டு எல்லையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் செல்சியாவின் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச் (இஸ்ரேல், போர்த்துகீசியம், ரஷ்யா போன்ற நாடுகளின் குடியுரிமை பெற்றவர்), உக்ரைன் எம்பி ருஸ்டெம் உமெரோ உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். மார்ச் 3ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டனர். இந்த முறைசாரா பேச்சுவார்த்தையின் போது, அப்ரமோவிச், ருஸ்டெம் உமெரோ உள்ளிட்ட 3 பேருக்கு திடீரென உடல்நலம் குன்றியது. அதையடுத்து போலந்துக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டனர். பின்னர் இஸ்தான்புல்லில் மருத்துவ சிகிச்சை பெற்றனர். தற்போது நலமுடன் உள்ள அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்னால் அவர்களின் கண்கள் சிவந்து பார்வை இழந்து இருந்தன. தோலில் ஆங்காங்கே சிவந்து காணப்பட்டது. உடல் வலி இருந்தது. அவர்களின் முகம் மற்றும் கைகளின் தோல் உரிந்தன என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தாலும் தற்போதைய சூழலில் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கீவ்வில் நடந்த பேச்சுவார்த்தையின் போது அப்ரமோவிச் உள்ளிட்டோருக்கு சாக்லெட், தண்ணீர் மட்டுமே கொடுத்துள்ளனர். அவர்களின் உடலில் விஷத்தன்மை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் மூன்று பேரும் மயக்க நிலையில் இருந்தனர். அவர்களின் கண்கள் சிவந்து இருந்தன. உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், ‘ரிமோட் மற்றும் ஆன்-சைட் பரிசோதனைகளின் அடிப்படையில் பார்க்கும் போது வரையறுக்கப்படாத ரசாயன ஆயுதத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் ஏற்பட்ட விஷத்தன்மையால் அவர்களின் உடல்நலம் குன்றியது. அவர்களை கொல்லும் நோக்கத்தில் விஷத்தன்மை கொண்ட உணவு பொருட்களை உட்கொண்டனரா? என்பது தெரியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்போது, ‘தற்போது நிறைய ஊகங்கள் வருகின்றன. அதிகாரப்பூர்வ தகவலை மட்டுமே நாங்கள் வெளியிடுகிறோம்’ என்றார். அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூவரின் உடல் விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டதால், அவர்கள் மூவரும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை. இந்த விவகாரம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு  பயந்து உக்ரைன் மக்கள் கிட்டத்தட்ட 37 லட்சம் பேர் போலந்து உள்ளிட்ட அண்டை  நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு அமெரிக்க உள்ளிட்ட  ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுத்து வருகின்றன. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த  குடிமக்கள் புகலிடம் கேட்டு மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய  முயற்சித்து வருகின்றனர். சிலர் ரகசியமாக தடுப்புகளை தாண்டி  அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் மெக்சிகோ – அமெரிக்க  அதிகாரிகள் குழு, அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த 35 ரஷ்ய குடியுரிமை  பெற்றவர்களை கைது செய்துள்ளது. அவர்கள் ரகசியமான இடத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களின் குடியுரிமை தொடர்பான விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூலிப்படை ‘வாக்னர்’ குழுகிழக்கு உக்ரைன் பகுதியை கடுமையாக ரஷ்யப் படைகள் தாக்கி வரும் நிலையில், அப்பகுதியில் ரஷ்யாவின் தனியார் ராணுவ நிறுவனமான ‘வாக்னர்’ குழுவின் கூலிப்படை போராளிகள் முகாமிட்டுள்ளனர். இதுதொடர்பாக பிரிட்டிஷ் ராணுவ உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘வாக்னர் குழுவின் மூத்த தலைவர்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவின் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘வாக்னர் குழு கிழக்கு உக்ரைனில் தங்களது கால்தடத்தை அதிகரிக்க உள்ளது’ என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.நான் மன்னிப்பு கேட்கவில்லைஅமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய போது, ‘ரஷ்ய அதிபர் புடின் தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது’ என்று கூறினார். இவரது பேச்சு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. இருந்தும் ஜோ பிடனின் பேச்சால், ரஷ்யா கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. இவ்விவகாரத்தால் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யப் பிரதிநிதிகளை சந்திப்பீர்களா? என்று கேட்கின்றனர். அவர்கள் எதைப் பற்றி பேச விரும்புகின்றனர் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ரஷ்ய அதிபர் குறித்து நான் கூறியதில் எவ்வித கருத்து மாற்றமும் இல்லை. தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். இந்த விசயத்தில் யாரிடமும் நான் மன்னிப்பு கேட்கவில்லை’ என்றார்.தடைகளை கடுமையாக்குங்கள்!உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்க வேண்டும்; தற்போது முழு அளவிலான போர் தொடங்கிவிட்டது. ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் போது, ஐரோப்பிய நாடுகளுக்கான ரஷ்ய எண்ணெய் விநியோகத்தின் மீது தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைகள் வந்துள்ளன. நான் கூறுவது வெறும் வார்த்தைகள் அல்ல; ரஷ்யா ராணுவம் இன்றுவரை நடத்திய தாக்குதல்கள் யாவும், எண்ணெய் தடையை நோக்கமாக கொண்டது. பாஸ்பரஸ் வெடிகுண்டுகள் அதற்கு சாட்சியாக உள்ளது. ஷெல் தாக்குதல் சம்பவம், அணுமின் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவற்றை கூறமுடியும். ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாகவும், அவர்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகள் பலவீனமானதாக இருக்கக் கூடாது. அப்போதுதான் அவர்கள் இப்போது செய்வதை போன்ற தாக்குதல்களை தொடரமாட்டார்கள். உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை சப்ளை செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை என்பதற்காக எங்களது உக்ரைன் மக்கள் இறக்கக்கூடாது. ரஷ்யா மீதான பயம்தான் உங்களை பலவீனமாக்குகிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இந்த பேரழிவிற்கு, நீங்களும் பொறுப்பாளிகள் ஆகிவிடுவீர்கள்’ என்று பேசியுள்ளார். இந்தியாவுடன் நெருக்கம்ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறுகையில், ‘உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்தியஸ்த முயற்சிகள் தொடர்பாக இந்தியா, துருக்கி, சீனா, இஸ்ரேல், கத்தார் உள்ளிட்ட நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளேன். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சூழ்நிலையை உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறேன்’ என்றார்.எண்ணெய் கிடங்கு மீது ராக்கெட் தாக்குதல்உக்ரைனின் வடமேற்கு ரிவ்னே பிராந்திய ஆளுநர் விட்டலி கோவல் வெளியிட்ட வீடியோவில், ‘ரிவ்னே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது ரஷ்யப் படைகள் ராக்கெட் தாக்குதலை நடத்தின. அவசர சேவைகளை மேற்பார்வையிட சம்பவ இடத்தில் உள்ளேன். என்னால் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை. மேற்கு உக்ரைனில் தரைவழி போர் நடக்கவில்லை. ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கிறது. ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிருக்கு பயந்து போலந்துக்கு செல்கின்றனர். பெரிய நகரமான லிவிவ்வில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் ராணுவ ஆலையை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கின’ என்றார்.ஜெர்மனியில் அமெரிக்க விமானங்கள் குவிப்புஅமெரிக்காவின் ராணுவ தலைமையகத்தின் பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், ‘வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கடற்படை விமான நிலையத்தின் விட்பே தீவை தளமாகக் கொண்ட இஏ-18ஜி என்ற விமானம் ஜெர்மனியின் விமான தளத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு அந்த விமானம் நிறுத்தப்படும். கிழக்கு ஐரோப்பாவின் நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பப்படுகிறது. மின்னணுப் போரில் நிபுணத்துவம் பெற்ற ஆறு கடற்படை விமானங்களும், சுமார்  240 கடற்படை வீரர்களும் அங்கு செல்வார்கள். இவை உக்ரைன் போருக்கு பயன்படுத்தக் கூடியவை அல்ல. தற்போது அங்கு கடற்படை விமானங்கள் அனுப்புவதற்கான காரணம், நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்துவது மற்றும் விமான ஒருங்கிணைப்பு திறன்களை அதிகரிப்பதற்காக மட்டுமே’ என்று தெரிவித்துள்ளது.அணுஆயுதம் பயன்படுத்துவோம்!ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான பிபிஎஸ்க்கு அளித்த பேட்டியில், ‘ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம். உக்ரைனுடனான தற்போதைய போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யா தரப்பில், நேட்டோ நாடுகள் மூலம் ரஷ்யாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்பட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.சக்தி வாய்ந்த சைபர் தாக்குதல்உக்ரைன் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் மீது சக்திவாய்ந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதால், இணையச் சேவைகள் முடங்கியது. இதுகுறித்து உக்ரைனின் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்புக்கான மாநில சேவையின் தலைவர் யூரி ஷிஹோல் கூறுகையில், ‘எதிரிகள் (ரஷ்யா) இன்று எங்களது தொலைதொடர்பு நிறுவனத்தின் உள்கட்டமைப்பிற்கு எதிராக சக்திவாய்ந்த சைபர் தாக்குதலை நடத்தினர். சில மணி நேரங்கள் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, அதனை முறியடித்துள்ளோம். தற்போது வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் தொடர்கின்றன’ என்றார்.போருக்கு செல்ல வேண்டாம்பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய 7 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக உக்ரைன் போரில் போரிட தன்னார்வப் போராளிகள் செல்ல வேண்டாம். போரின் தன்னார்வர்களாக சேருவதை பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் குடிமக்கள் தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் பேச்சுவார்த்தைஉக்ரைன் – ரஷ்யப் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், இருநாட்டு பிரதிநிதிகள் குழு இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், சில பேச்சுவார்த்தைகள் காணொலி மூலம் நடத்தப்பட்டன. ஆனால், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான நேருக்கு நேர் அமைதி பேச்சுவார்த்தை இன்றும், நாளையும் துருக்கியில் நடைபெறவுள்ளது….

The post உக்ரைன் சார்பில் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தொழிலதிபர், எம்பி உள்ளிட்ட 3 பேரின் உடலில் விஷம்..! appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russians ,America ,Kiev ,Dinakaran ,
× RELATED ரஷ்யா- உக்ரைன் டிரோன் யுத்தம்: 90 டிரோன்கள் அழிப்பு