×

ஓராண்டிற்கு பின் தொட்டபெட்டா சாலை திறப்பு-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி : ஓராண்டிற்கு பின் ஊட்டி தொட்டபெட்டா மலைச் சிகரம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் வனச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. இதனால்,  வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதுதவிர, தொட்டபெட்டாவில் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்தது. தொட்டபெட்டா சாலையில் பழுதடைந்த பகுதியில் சிறு பாலம் அமைக்க ரூ‌.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரில் பணிகள் துவக்கப்பட்டன. தொடர்ந்து பக்கவாட்டில் பாதுகாப்பு சுவர் அமைக்க ரூ.19.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுவர் கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக ஓராண்டிற்கு பின் நேற்று முதல் திறக்கப்பட்டது. இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அதன்பின், அவர் கூறுகையில், ‘‘தொட்டபெட்டா சிகரம் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் சாலை சேதமடைந்தது. இதனால், கடந்த பல மாதங்களாக தொட்டபெட்டா சிகரம் மூடப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதுடன், இங்கு கடை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதித்தது. இதனை கருத்தில் கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.இனிமேல் சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம்’’ என்றார். கடந்த ஓராண்டிற்கு பின் தொட்டபெட்டா சிகரம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post ஓராண்டிற்கு பின் தொட்டபெட்டா சாலை திறப்பு-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thottapeta ,Ooty ,Dottapetta ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில்...