×

ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்; காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டில் குறைந்தளவில் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஞ்சிபுரம்: ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம் நடத்தியது. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் குறைந்தளவு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்ததுல், தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிடல், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறுதல் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் விவரம்: காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பஸ்கள் குறைந்தளவில் இயக்கப்படுகிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையம், ஓரிக்கை-1, ஓரிக்கை-2, உத்திரமேரூர் ஆகிய பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 140 பஸ்களில் 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பலர், பஸ் நிலையத்தில் காத்திருந்தும், வெகு நேரமாக பஸ்கள் வராததால் திரும்பி சென்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆட்டோ மற்றும் பைக்குகளில் பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் தேரடியில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்றனர். தொமுச துணை செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரவரதன் முன்னிலை வகித்தார். போக்குவரத்து கழக தலைவர் சுதாகரன், பெருமாள் சேகரன், சிஐடியு நிர்வாகிகள் மதுசூதனன், நந்தகோபால், தொமுச நடராஜன் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து தொமுசவினர் பேரணியாக புறப்பட்டனர். இதில், சிஐடியு மாநில குழு உறுப்பினர் மதுசூதன் தலைமையில், நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, பாஸ்கரன், பெருமாள் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், கல்பாக்கம், தாம்பரம் ஆகிய பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு பணிமனையில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், தாம்பரம், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களுக்கு 112 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தளவு பஸ்களே இயக்கப்பட்டது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தனியார் பஸ்களில் அதிகளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலானோர், ஆட்டோ மற்றும் பைக்குகளில் பயணம் செய்தனர். ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் பயணச்சீட்டு வாங்க கூட்டம் அலைமோதியது. மின்சார ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பொன்னேரி ஆகிய 6 போக்குவரத்து பணிமனையில் இருந்து மொத்தம் உள்ள 223 அரசு பஸ்களில் 80 பஸ்கள் மட்டுமே இயங்கியது. மாவட்டம் முழுவதும் 37 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. அதே நேரத்தில் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது. மாவட்டத்தில் 10 சதவீத மாநகர பஸ்கள் மட்டுமே இயங்கி வருகிறது. திருவள்ளூர் உழவர் சந்தை அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டமும் நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையம் அருகே சிடிஎச் சாலையில் எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டிசி, ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று காலை மறியல் நடைபெற்றது. இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் லெனின் சுந்தர், ராஜ்குமார், மாரியப்பன், ஸ்டீபன், மதன் உள்பட 200 பேரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். ஆவடி: ஆவடி பஸ் நிலையம் சிடிஎச் சாலையில், அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பூபாலன், நாகூர்கனி, ஜான், மயில்வாகனன், ஆதவன் உள்பட 200 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் காரணமாக அம்பத்தூர், ஆவடி பணிமனைகளில் இருந்து மிக குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டது.இதுபோல், ஆவடியில் உள்ள பாதுகாப்புத்துறை நிறுவனங்களிலும் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ரயில் நிலையத்தைமுற்றுகையிட முயற்சி செங்கல்பட்டில் சிஐடியு, ஏஐடியுசி, மின்சார துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தபால் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது….

The post ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்; காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டில் குறைந்தளவில் பஸ்கள் இயக்கம்: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Trade Unions ,Union Government ,Kanchi, Tiruvallur, Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur, ,Chengalpattu ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...