×
Saravana Stores

அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நிழற்குடை அமைப்பு, விளம்பரம் மூலம் ரூ.400 கோடிக்கு ஊழல்: அறப்போர் இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் கடந்த 2015 முதல் 2017வரை 400 பேருந்து நிழற்குடைகள் அமைத்தது மற்றும் அதில் விளம்பரம் செய்ததில் ரூ 400 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  மற்றும் அவருக்கு வேண்டியவர்கள் மீது அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி ஜெயராமன் சென்னையில் அளித்த பேட்டி வருமாறு: சென்னை மாநகராட்சியின் டெண்டரை பயன்படுத்தி 400 கோடிக்கும் மேல் ஊழல் செய்துள்ளனர். ஒரு புறம் நிழற்குடை அமைத்தல், மறுபுறம் பேருந்து  நிழற்குடைகளில் விளம்பரம் செய்தல் என்று கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 400 நிழற்குடைகள்  கட்டப்பட்டது கருப்பு பணத்தில்தான். கடந்த 2015, 2016, 2017ம் ஆண்டுகளில் கருப்பு பணத்தின் மூலம் கொல்கத்தா போன்ற இடங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஷெல் (போலி) கம்பெனிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் பல கம்பெனிகள் மூலம் கருப்பு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது. அதாவது, பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக 2015ல் இ-டெண்டர் மூலம் இந்த டெண்டர்கள் போடப்பட்டுள்ளன. 2016 செப்டம்பர் மாதம் டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டது. 8 பேக்கேஜ் அதாவது ஒரு பேக்கேஜில் 50 பேருந்து நிறுத்தங்கள் என 400 பேருந்து நிறுத்தங்கள் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு பஸ் நிறுத்தம் கட்ட 10 லட்சம் ஆகும். அதை கட்டி 15 வருடங்களுக்கு அவற்றில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம். ஒரு மாதத்திற்கு விளம்பரம் மூலம் ரூ1 லட்சத்து 30 ஆயிரம் நிறுவனங்களுக்கு கிடைக்கும். அப்படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு ரூ.15  லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கும். அதில் மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் மாதம் ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு வருடத்திற்கு 15 ஆயிரம் தருவதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் மட்டுமே. அதன் மூலம் இவர்களுக்கு ஒரு நிழற்குடைக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் லாபம் கிடைக்கும். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. பிரச்னை வரும் என்று தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, 2015 அக்டோபர் 29ம் தேதி மறு டெண்டர் விடப்பட்டது. இதில் விதிமுறைகளை திருத்தி, ஜீரோ பரிவர்த்தனை உள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த வகையில் 90 சதவீத டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இதற்காக பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் கேசிபி இன்ஜினியர் நிறுவனத்தில் பண பரிவர்த்தனையை காட்டியுள்ளது.  ஸ்கைராமஸ் அவுட்டோர் நிறுவனம் 50 பேருந்து நிறுத்தங்களை அமைக்க ரூ.92 லட்சத்து 65 ஆயிரத்திற்கான டெண்டரை கோரியது. இதேபோல் 50 பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்காக மேலும் 2 டெண்டர்களையும் இந்த நிறுவனம் கோரியது. பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் இதேபோல் தலா 50 பேருந்து நிறுத்தங்களை அமைக்க 3 டெண்டர்களை தலா ரூ.79 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கோரியது.சைன் அவுட்டோர் நிறுவனம் ரூ.79 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் 2 டெண்டர்களை கோரியது. இந்த டெண்டர்கள் 2016 அக்டோபர் 29ம் தேதி இந்த நிறுவனங்களுக்கு இறுதி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களின்  நிறுவனங்களுக்குத்தான் இந்த டெண்டர்களை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. கடந்த 2016ல் மாநகராட்சி அறிவித்த டெண்டரில் வேறு நிறுவனங்கள் பங்கேற்றதால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் மாநகராட்சிக்கு ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு விளம்பரம் செய்ய இந்த நிறுவனங்கள் 15 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.1.3 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளன. இதன் மூலம் 400 பேருந்து நிறுத்தங்களில் விளம்பரம் மூலம் 15 ஆண்டுகளுக்கு ரூ.485 கோடியே 28 லட்சம் லாபம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.288 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே, இந்த  முறைகேடு குறித்து எஸ்.பி.வேலுமணி, செந்தில் பிரபு ராஜன், சீனிவாசன், சித்தார்த்தன் தாமோதரன், இதில் சம்மந்தப்பட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை, அமலாக்க துறை மற்றும் வருமான வரி துறைக்கு புகார் கொடுத்துள்ளோம்.இவ்வாறு ஜெயராமன் தெரிவித்துள்ளார்….

The post அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் நிழற்குடை அமைப்பு, விளம்பரம் மூலம் ரூ.400 கோடிக்கு ஊழல்: அறப்போர் இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Shadowy Organization ,Chennai Municipal Corporation ,Chennai ,Chennai, Chennai ,Shadowy Organisation ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை; பட்டாசுளைக்...