×

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் மோசடி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் ஆவேசம்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்ற இசை நிகழ்ச்சி பனையூரில் கடந்த 10ம் தேதி நடந்தது. ஏசிடிசி ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க 35 ஆயிரம் பேருக்குதான் இருக்கைகள் இருந்தன. ஆனால், அதைவிட கூடுதலாக மேலும் 10 ஆயிரம் பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமானோர் அரங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அரங்கத்துக்கு வெளியே ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.

இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் பாதுகாப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்தனர். இளம்பெண்கள் பலர் அழுதபடி காட்சியளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட ஏசிடிசி ஈவென்ட்ஸ் நிறுவனம்தான் இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும். மோசடியில் ஈடுபட்ட அந்நிறுவனத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபற்றி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என்பது மிகவும் சவாலான பணி. நல்ல நோக்கத்துக்காக நிகழ்ச்சி நடத்தினாலும், கூட்ட நெரிசல் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறான செயல்பாடுகளால் நோக்கம் சீர்குலைந்துவிடுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்தப்படுவதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்வார்கள் என நம்புகிறேன். சக இசையமைப்பாளர் என்ற முறையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்லாம் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் நிகழ்ச்சி நடத்துவதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் இதுபோன்ற சூழலை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

The post ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் மோசடி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் ஆவேசம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,AR Rahman ,Panayur ,ACDC Events ,AR ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!