×

செஷல்ஸ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 48 தமிழர்கள் உள்பட 56 இந்திய மீனவர்கள் வருகை

சென்னை:  செஷல்ஸ் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 48 தமிழர்கள் உள்பட 56 இந்திய மீனவர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் வந்தனர்.தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஒரு தனியார் மீன்பிடி நிறுவனத்தில் வேலை பார்த்த 56 மீனவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். பின்னர் மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் அவர்களின் விசைப்படகுகள் அலைமோதின. இதை தொடர்ந்து, செஷல்ஸ் நாட்டு கடல் எல்லைக்குள் படகுகளின் தள்ளாட்டத்தினால் நுழைந்த 56 இந்திய மீனவர்களை, கடந்த பிப்ரவரி 21ம் தேதி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதில், தமிழகத்தை சேர்ந்த 48 மீனவர்களும் அடங்குவர். அவர்களை அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்து இருந்தனர். தென் மாவட்டங்களை சேர்ந்த 48 பேரை மீட்கக் கோரி தமிழக அரசிடம் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள இந்திய தூதரகம் வாயிலாக அந்நாட்டு அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.இதையடுத்து, செஷல்ஸ் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 56 இந்திய மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். அந்த மீனவர்களை இந்தியா கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் 56 மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். இந்த 56 மீனவர்களுக்கும் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதை தொடர்ந்து, அனைவரும் தூதரகத்தின் எமர்ஜென்சி சர்டிபிகேட் மூலம் வந்திருந்தனர்.சென்னை விமானநிலையம் வந்த 56 மீனவர்களிடம் குடியுரிமை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரித்தனர். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் விசாரணை முடிந்து 56 இந்திய மீனவர்களும் வெளியே வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர் 56 பேரையும் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு பஸ், வேனில் அனுப்பிவைத்தனர். அங்கிருந்து தமிழக மீனவர்களை தவிர, மற்ற மாநில மீனவர்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.இந்த 56 பேரில், 48 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 4 பேர் கேரளா, 3 பேர் அசாம், ஒருவர் அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் என குறிப்பிடத்தக்கது….

The post செஷல்ஸ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 48 தமிழர்கள் உள்பட 56 இந்திய மீனவர்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Tamils ,Seychelles ,Chennai ,Indian Air Force ,Seychelles jail ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!