×

விசாரணை ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை: இறப்பதற்கு முன் 3 அமைச்சர்கள் நேரில் பார்த்தோம்; ஓபிஎஸ் அந்தர் பல்டி அடித்ததால் பரபரப்பு

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2-ஆவது நாளாக ஆஜரான ஓபிஎஸ் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2வது நாளாக ஆஜரானார். அவரிடம்  நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது 3 தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்தது யார் என விசாரணை ஆணையம் பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதாதான். அது தொடர்பான படிவங்களில் அவர் கைரேகை வைத்தது எனக்கு தெரியும். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் நன்றாக இருப்பதாக சசிகலா ஒரு சில முறை என்னிடம் தெரிவித்தார். நான்  இதனை சக அமைச்சர்களிடம் தெரிவித்தேன். பொதுவெளியில் எங்கும் பேசவில்லை. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் தன்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது என்று ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ், ‘ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது’ என்றார். அதனை தொடர்ந்து, ஓபிஎஸ்யிடம் ‘என்னனென்ன மருந்துகள் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது’ என்று ஆணையம் கேள்வி எழுப்பியது. அப்போது குறுக்கிட்ட அப்போலோ தரப்பினர் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கக் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மருத்துவம் தொடர்பான கேள்விகள் கேட்க அப்போலோ தரப் பில் தெரிவித்த எதிர்ப்பை ஆணையம் பதிவு செய்தது.மேலும் ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, ‘ஜெயலலிதா இறப்பதற்கு முன் மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்தோம். (நேற்று முன்தினம் அளித்த வாக்குமூலத்தில் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார்).  டிசம்பர் 4 தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும் ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து எனக்கு நினைவில்லை.  டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது. ஆனால் மாலை 5.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மதியம் 2.40 மணிக்கு ஓபிஎஸ் மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். மதிய உணவுக்கு பின் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது ‘ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை’ என்றார். ஆறுமுகசாமி ஆணையத்தில் 2011-12ம் ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ், சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரி தான்.ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா தன்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் என்று சொன்னார். அதே நேரத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அப்போதைய  அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் எனவும் அவர் பெயரை நீங்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார். அப்போது நான்  மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தேன். அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும். சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என ஜெயலலிதா கூறினார்.மேலும் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனை வழங்கிய சிகிச்சை மீது நம்பிக்கை  இருக்கிறதா? என்று ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு ஓபிஎஸ்  ‘ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனை வழங்கிய சிகிச்சை மீது நம்பிக்கை  இருந்தது. மேலும் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணையில் சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காக ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா? ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல்2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கத்தான் ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா? மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தான், இப்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள்? சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா? விசாரணை அமைக்கப்பட்ட முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து தெரியுமா ?  ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா ? என்று குறுக்கு விசாரணையில் கேள்வி எழுப்பினர்.அதற்கு ஓபிஎஸ் ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும். ஆணையம் பணித்ததால் வந்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தான் ஆணையம் அமைக்கப்பட்டது சரி தான்,  சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது. மேலும் நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளில் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு, நடந்த விசாரணையில் முழுவதுமாக வரவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 11 எம்எல்ஏக்களுடன் தனி அணியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து பல முறை பொது இடங்களில் பேசும்போது, சிபிஐ விசாரணை நடத்தினால் முதலில் மாட்டுவது விஜயபாஸ்கர்தான் என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும் சசிகலா மீது மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* ஓபிஎஸ்சிடம் 165 கேள்விகள்ஓபிஸ் வருகையையொட்டி அதிமுகவினர் பன்னீர்செல்வம் வாழ்க என கோஷம் போட பெண்களை அழைத்து வந்தனர். அவர்களுக்கு தலா 200 ரூபாய் கொடுத்தனர். மதிய உணவாக சாம்பார் சாதமும் வழங்கப்பட்டது. ஓபிஎஸ்சிடம் ஆறுமுகசாமி தரப்பில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்பட்டது. சசிகலா தரப்பில் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணையில் 34 கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் மகி புனா குறுக்கு விசாரணையில் 11 கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில், மொத்தம் 165 கேள்விகள் கேட்கப்பட்டன.* சசிகலா மீது மரியாதை உள்ளதுஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசின் சார்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் எதிர்தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை அளித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை தந்திருக்கிறேன். தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன் தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்தேன். ஆணையத்தின் விசாரணை எனக்கு முழு திருப்தியாக இருக்கிறது, எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.* சாட்சி விசாரணை முடிந்ததுஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டிய அனைத்து சாட்சிகளையும் ஆணையம் விசாரித்து விட்டது. அப்போலோ தரப்பும் சசிகலா தரப்பும் யாரையவது குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென்றால் அதற்கான பட்டியலில் அடுத்த வாரம் புதன்கிழமை வழங்கலாம். அது தொடர்பான ஆலோசனை புதன்கிழமை நடைபெறும். * சிகிச்சை திருப்திஅப்போலோ வழக்கறிஞர் பேட்டி: அப்போலோ தரப்பு குறுக்கு விசாரணையின் போது அப்போலோ மருத்துவர்கள் மீதும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கிய சிகிச்சை குறித்தும் முழு நம்பிக்கை கொண்டிருந்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆணையம் அமைக்க கோரியவரே சிகிச்சை குறித்து திருப்தி தெரிவித்தது தங்கள் தரப்புக்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார்….

The post விசாரணை ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை: இறப்பதற்கு முன் 3 அமைச்சர்கள் நேரில் பார்த்தோம்; ஓபிஎஸ் அந்தர் பல்டி அடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,OPS ,CHENNAI ,Arumugasamy Commission of Inquiry ,Jayalalitha ,Commission ,Andar ,
× RELATED 2001, 2017ல் நான் முதல்வராயிருக்க முடியும்:...