×

தஞ்சை அருகே கைவிலங்குடன் கைதி தப்பியோட்டம்: காவல்துறையுடன் பொதுமக்களும் சேர்ந்து தேடும் பணி தீவிரம்

தஞ்சை: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வரகுடி பிள்ளையார் தெருவைச் சேர்ந்தவர் 31 வயதான தனசேகரன். தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களிலும் தனசேகரன் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இதேபோல் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு திருட்டு வழக்கில் சிக்கிய தனசேகரன் கைது செய்யப்பட்டு, கோபிச்செட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வேளாங்கண்ணி திருட்டு வழக்கினை விசாரிப்பதற்காக கோபிச்செட்டிபாளையம் சிறையில் இருந்து நாகை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்காக, நேற்று நாகை மாவட்டத்திலிருந்து போலீசார் தஞ்சை வந்தனர். கோபிச்செட்டிபாளையம் சிறையில் கைதி தனசேகரனை நேற்று மாலை நாகை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அதிகாலை நாகை வரும் வழியில், தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வளம்பகுடி அருகே 3 காவலர்களுடன் வந்த காவல் வாகனத்தில் இருந்து வாகன ஓட்டுநர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும் இயற்கை உபாதையை கழிக்க வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்பொழுது கைதி தனசேகரனுடன் இருந்த சக காவலர் அயர்ந்து தூங்கி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கைதி தனசேகரன், கைவிலங்குடன் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியுள்ளார். இதனை அறிந்த காவலர்கள் கைதி தனசேகரனை பிடிக்க முயன்றனர். இருப்பினும் தனசேகரன் தப்பியுள்ளார். இதனை உடனடியாக சங்கிபட்டி காவல்துறையினருக்கு காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், கைதி உடனிருந்த 3 காவலர்களும் அதிகாலையில் இருந்து தற்போது வரை கைதியை தொடர்ந்து தேடி வருகின்றனர். கைதி தனசேகரன் மீது கடந்த 2016, 2017,2018 உள்ளிட்ட ஆண்டுகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதி தனசேகரன் கைவிலங்குடன் தப்பிச் சென்றது அப்பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வளம்பகுடி அருகே உள்ள பொதுமக்களும் காவல்துறையுடன் சேர்ந்து தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் உள்ள காவல்துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியானது மிக தீவிரமாக்கப்பட்டுள்ளது.      …

The post தஞ்சை அருகே கைவிலங்குடன் கைதி தப்பியோட்டம்: காவல்துறையுடன் பொதுமக்களும் சேர்ந்து தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanasekaran ,Varagudi Pilliyar Street ,Nagai District Nagor ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...