×

மாஜி மந்திரி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் அதிர்ச்சியில் இருக்கும் 6 எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாஜி மந்திரி வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடந்ததற்காக யார் பயப்படறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவையை சேர்ந்த மாஜி மந்திரி பெல்லானவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று 2வது முறையாக சோதனை நடத்தினர். இவரது வீடு மட்டுமின்றி, குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தொடர்புடைய நிறுவனங்கள் என  ஒரே நாளில் 58 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. இந்த ரெய்டு காரணமாக, இலை கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். இவர்களைவிட, கோவையை சேர்ந்த ஆறு மக்கள் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாம். அதாவது, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் , சூலூர், வால்பாறை, கிணத்துக்கடவு, சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவர் வெற்றியிலும், தேர்தல் பணியிலும் மாஜி மந்திரி பெல்லானவருக்கு பெரும் பங்கு இருக்காம். கரன்சி பட்டுவாடாவில் இருந்து, தொழில் உறவு, கொடுக்கல், வாங்கல் போன்ற விவரங்கள் போன்றவை எல்லாவற்றிலும் இந்த ஆறு பேருக்கும் இணைப்பு சங்கலி இருக்காம். அவரை தொடர்ந்து தங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையின் பார்வை படுமோ என்ற பயத்தில் இருக்காங்களாம். இதனால், ஆதாரங்களை மாற்றவும், அழிக்கவும் மூவ் செய்வதாக இலை கட்சி தொண்டர்களிடையே பேச்சு ஓடுதாம். இதனால, ஆறு மக்கள் பிரதிநிதிகளும் எப்படி தப்பிப்பது என்ற யோசனையில் அடிக்கடி சந்தித்தும், பேசியும் காய் நகர்த்தி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாக்குறுதி நிறைவேறாததால் மக்களிடம் சரணடைந்த மக்கள் பிரதிநிதி பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மக்காச்சோள மாவட்டத்தில், கண்ணகிக்கு கோவில் கொண்ட சிறுவாச்சூர் கிராமத்தில் நெடுஞ்சாலை உயிர் பலிவாங்கும் சாலையாக மாறி உள்ளதாம். இதனால பொதுமக்கள் மறியல் செய்ய, மேம்பாலம்  கட்ட கடந்த ஆட்சியில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாம். 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநில இலை கட்சி எம்பி முன்னிலையில், தாமரையின் மாஜி ஒன்றிய அமைச்சர் தலைமையில் கட்டுமான பணிகள் தொடங்கியதாம். அப்போது இலை கட்சியை சேர்ந்த 2 எம்பிக்கள் பங்கேற்று தொடங்கிய பணிகள் 2 ஆண்டுகளாக 20 சதவீதம் கூட நடக்கவில்லையாம். இந்நிலையில், கடந்த 8  மாதத்திற்கு முன் ஏதேச்சையாக வந்து அந்த மேம்பால பணியை பார்த்தார் வேந்தர் என்ற பெயரில் முடியும் மக்கள் பிரதிநிதி. அவரும் மக்களிடம்  எம்பி,  மத்திய அமைச்சர்கிட்ட மனு கொடுத்திருக்கேன். எங்கிட்ட சொல்லீட்டிங்கல்ல,  ரெண்டே மாசத்துல முடிஞ்சுடும்னு சொல்லிட்டு போனவரு, 2 நாள் முன்னாடி வந்தாராம். மேம்பால பணி ஒர அடி கூட உயரலையாம். இதனால வேந்தரானவர் ஷாக் ஆயிட்டாராம். மக்கள் பிரதிநிதியை பார்த்த ஊர் மக்கள் ஏகத்துக்கும் ஏகிறியதால் திக்கு முக்காடிய அவர், இனியும் வேலை நடக்காவிட்டால், மக்களோடு சேர்ந்து  நானும் மறியலில் ஈடுபடுவேன்னு சாலை நடுவிலேயே மக்களிடம் சரணடைந்துவிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த இலைப்புள்ளிகளின் வயிற்றில் புளியைக் கரைக்குதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ வெயிலூர் மாநகராட்சி  நிர்வாகம் சமீபத்தில் மாநகராட்சி எல்லை பகுதியில் பூங்காவுக்கு சொந்தமான  இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அதிரடியாக மீட்டது. இது  எல்லாருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. ஆனாலும், அதே மாநகராட்சி எல்லையில்  திருப்பதி ஆண்டவனின் மனைவியின் பெயரை கொண்ட ஊரில் கிரியான நகர்,  எம்ஜிசியான நகர் பகுதிகளில் உள்ள பல சென்ட் இடங்களையும், அப்போது  கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சுற்றியுள்ள பல சென்ட்  இடத்தையும் கல் குவாரி சொந்தக்காரரும், பெரிய கான்ட்ராக்டருமான  மூன்றெழுத்து இனிஷியல் இலைப்புள்ளியும், சத்தான பகுதியின் பிரபல ஜவுளி  கடைக்கு சொந்தக்காரரும் சேர்ந்து சுற்றி வளைத்துள்ளார்களாம். அந்த  இடங்களையும் மாநகராட்சி நிர்வாகம் அளவெடுத்து மீட்க வேண்டும் என்று அந்த  ஊரை சேர்ந்த மக்கள் கேட்டு வருகிறார்களாம். அடுத்த கட்ட நடவடிக்கையால் இலை புள்ளிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுச்சேரி காவலர் தேர்வில் என்ன பிரச்னையாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் எட்டு ஆண்டுகளுக்கு பின் காவலர் தேர்வுக்காக எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது. இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இதற்கிடையே புதுச்சேரியில் ஒலு வீடியோ வைரலாக பரவி வருகிறதாம். அதில், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காவலர் எழுத்து தேர்வின் போது கொடுக்கப்படும் ஓ.எம்.ஆர் வினாத்தாளில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் எத்தனை வினாக்களுக்கு பதில் அளிக்கிறோம் என்பதை தேர்வு எழுதுபவர்கள் குறிப்பிட்டு, அந்த அறையின் கண்காணிப்பாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் நடைபெறவுள்ள எழுத்து தேர்வில் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை. இதனால் எழுத்து தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்த விவகாரத்தில் ‘பவரில்’ உள்ளவர்கள் தலையிட கோரிக்கை எழுந்துள்ளது. அப்புறம், ரூ. 7 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை என ஒரு சிலர் வீணாக புரளியும் கிளம்பி இருக்கிறதாம். தேர்வே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இத்தனை பிரச்னைகளா என்று ஆளுங்கட்சி ஆவேசப்படுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post மாஜி மந்திரி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையால் அதிர்ச்சியில் இருக்கும் 6 எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji Minister ,Peter ,Maji Mantri Bellanavar ,Goa ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...