- சென்னை
- ரஜினிகாந்த்
- சன் பிக்சர்ஸ்
- மோகன்லால்
- சிவராஜ்குமார்
- ஜாக்கி ஷெராப்
- விநாயகம்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.375.40 கோடி வசூலித்து, தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், யோகி பாபு, மிர்னா மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்திருந்தார், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். நெல்சன் இயக்கி இருந்தார்.
கடந்த 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘ஜெயிலர்’ படம், உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படம் ரூ.375.40 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாக ‘ஜெயிலர்’ சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.
விழாவில் இயக்குனர் நெல்சன் பேசியதாவது: இந்த படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றிக்கு காரணம் ரஜினி என்கிற பவர். ரஜினி ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘காவாலா’ பாடல்தான் படத்தின் வெற்றியை தொடங்கி வைத்தது. அதற்கு காரணமான அனிருத்துக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமானது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கேட்பதை எல்லாம் தயாரிப்பு தரப்பில் செய்து கொடுத்தார்கள். தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் ஒன்லைன் கதை சொல்லி தப்பித்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அவர் 2 மணி நேரம் கதை கேட்டார். 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக கதை கேட்பார் என்பதை புரிந்து கொண்டேன். காரணம் அவருக்கு இந்த கதையின் மீதிருந்த ஈர்ப்பு, அக்கறை. அவருக்கு பல பணிகள் இருந்தாலும் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரைக்கும் அதிக அக்கறை காட்டினார். ‘எப்போது படத்தை காட்டுவீர்கள்’ என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டே இருந்தார். நல்ல படம் தருவானா என்று என் மீது சந்தேகம் இருந்த காலத்தில் நம்பிக்கை வைத்தவர் ரஜினி. ஒரு பெரிய நட்சத்திரம் என் மீது வைத்த நம்பிக்கையை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.
படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரஜினிக்கு படத்தை போட்டுக் காட்டினேன். படம் முடிந்ததும் ‘இந்த கதையை உங்களிடம் சொன்னபோது உங்கள் மனசுக்குள் இந்த படம் இப்படித்தான் இருக்கும், இப்படி வரும் என்ற ஒரு கற்பனை இருந்திருக்கும். அதுபோன்று படம் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, ‘அதை விட பத்து மடங்கு அதிகமாக இருந்தது’ என்றார். படத்தின் வெற்றியை அப்போதே நான் உணர்ந்தேன். ரஜினி இந்த கதையை நம்பி தனது இமேஜையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எங்களோடு இணைந்தார். நாங்கள் எதை சொன்னோமோ அதை செய்தார். அவர் தன்னை முழுமையாக எங்களிடம் ஒப்படைத்தார். ரஜினியின் கண்களுக்கு நான் சிறு வயதிலிருந்தே ரசிகன்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கும் இந்த படத்தில் அவரது கண்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார். பொதுவாகவே ரஜினியின் கண்களே நடிக்கும், பேசும், உணர்வுகளை வெளிப்படுத்தும். சாதாரணமாக அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது கண்கள் பேசுபவரை உற்று கவனிக்கும். அவர்களை மேலிருந்து கீழ் வரை அலசும். உணர்வுகளை கடத்தும். அதனால்தான் இந்த படத்தில் பல காட்சிகளை குளோஸப்பாக வைத்து அவரது கண்களின் நடிப்பை படமாக்கினோம். இவ்வாறு நெல்சன் பேசினார். விழாவில் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், எடிட்டர் நிர்மல், நடிகர்கள் சுனில், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, ஜாபர், நடிகை மிர்னா மேனன், கலை இயக்குனர் கிரண், ஆடை வடிவமைப்பாளர் பல்லவி, ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டன்ட் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முதல் வாரத்தில் ஜெயிலர் ரூ.375கோடி வசூல்: தமிழ் சினிமா வரலாற்றில் புது சாதனை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.