×

200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்,’மிதவை கண்ணாடி பிரிவு, நகர்ப்புற வனம்’ : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (9.3.2022) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் செயின்ட்-கோபைன் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு (Float Glass), ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் – சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1998-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகத்தில் செயின்ட்-கோபைன் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி,  செப்டம்பர் 2000-ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூரில் 177 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிறுவனம், 3,750 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இவ்வளாகம்,  இந்நிறுவனத்தால் அதிகபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்ட ஆலையாகத் திகழ்கிறது. தமிழ்நாடு முழுவதும் இந்நிறுவனம் சுமார் 4,700 கோடி ரூபாய் முதலீட்டினை செய்து, நேரடியாக 2000 நபர்களுக்கும், மறைமுகமாக 2500 நபர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.  இந்த வளாகத்தில், கண்ணாடி, டின்டட் கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, லாக்வெர்டு கண்ணாடி, இன்சுலேட்டட் உறுதியான கண்ணாடி, மேற்பூச்சு உள்ள கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, தீப்பிடிக்காத, குண்டு துளைக்காத, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட 90 சதவீத கண்ணாடிகள் இந்த வளாகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.  மிதவை கண்ணாடிப் பிரிவு இந்த மிதவை கண்ணாடிப் பிரிவு அதிகபட்ச உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், பிரத்யேகமான வடிவமைப்பு 4.0 ஆகிய சிறப்பு தன்மைகளை உள்ளடக்கியது. நவீன கட்டமைப்புகளுக்கேற்ற கண்ணாடிகள், ஆட்டோமொபைல் துறைக்கேற்ற கண்ணாடிகள் மற்றும் சூரிய மின்உற்பத்திக்கான கண்ணாடிகளை தயாரிக்கிறது. ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு  இந்த ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவானது முழுவதும் டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறையில் செயல்படும். 10,000 சதுரமீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 1 இலட்சம் ஜன்னல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் சிறந்த புத்தாக்க, ஆராய்ச்சி மற்றும் சோதனைக்குட்படுத்தப்பட்ட யுபிவிசி ஜன்னல் சார்ந்த பொருள்கள், குறிப்பாக எதிரொலி கேட்காத, சூரிய மற்றும் வெப்பம் கடத்தாத மற்றும் பாதுகாப்பானவையாக தயாரிக்கப்படுகிறது.  செயின்ட் – கோபைன் சிப்காட் நகர்ப்புற வனம் சுமார் 3 இலட்சம் சதுரடி பரப்பளவில் ஏறக்குறைய 60,000 மரங்கள் கொண்டதாக இவ்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் தமிழ்நாடு அரசின் பசுமை இலக்கை எட்டுவதற்கும், மாநிலத்தின் பசுமை பகுதி அளவை 33 சதவீதம் உயர்த்தவும் உதவுகிறது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. செல்வப்பெருந்தகை, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எம். ஆர்த்தி, இ.ஆ.ப., செயின்ட் கோபைன்  நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு.பெனாய்ட் பாசின், செயின்ட் கோபைன்  இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், செயின்ட் கோபைன் ஆசிய – பசிபிக் தலைமைச் செயல் அலுவலருமான  திரு. பி. சந்தானம், பிரான்ஸ் நாட்டு தூதர் லிசி டாபு, செயின்ட் கோபைன்  இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள்  திரு. எஸ்.என். ஐசனோவர், திரு. ஏ.ஆர். உன்னி கிருஷ்ணன், பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்,’மிதவை கண்ணாடி பிரிவு, நகர்ப்புற வனம்’ : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Float Glass Division, Urban Forest ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Sh.R. ,G.K. Stalin ,Kanchipuram District, ,Sripurudur ,St Cobain Company ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!