×

‘ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’: டொமினிக் தீம் பேட்டி

வியன்னா: ‘‘காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன். ஆனால் உடனடியாக போட்டிகளில் பங்கேற்று, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஒரு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டு ஏப்ரலில் பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்‘‘ என்று ஆஸ்திரியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் டொமினிக் தீம் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரிய டென்னிஸ் வீரர் டொமினிக் தீம், கடந்த 2020ம் ஆண்டு யு.எஸ்.ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றினார். தவிர அதே ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் ரன்னர் கோப்பையை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பைனலுக்கு தகுதி பெற்று, ரன்னர் கோப்பையை வென்றுள்ளார். இதையடுத்து ஏடிபி தரவரிசையில் அவர் 3ம் இடத்தை பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டென்னிஸ் போட்டி ஒன்றில் ஆடிக் கொண்டிருந்த போது, அவரது  வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர், தற்போது முழுமையாக குணமடைந்து விட்டார். இருப்பினும் அமெரிக்காவில் இம்மாதம் நடைபெற உள்ள இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  தொடர்ச்சியாக 9 மாதங்கள் அவர் போட்டிகளில் பங்கேற்காததால் தற்போது ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் அவர் 51வது இடத்தில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘தற்போது குணமடைந்துவிட்டேன். பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது. ஆனால் உடனடியாக போட்டிகளில் பங்கேற்று, ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் இம்மாதம் நடைபெற உள்ள  இண்டியன்வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அமெரிக்காவில் டென்னிஸ் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அங்கு எனக்கு ரசிகர்கள் அதிகம். ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவினால்தான் கடந்த 2019ம் ஆண்டு இண்டியன்வெல்சில் கோப்பையை கைப்பற்றினேன். இந்த ஆண்டு நான் பங்கேற்கவில்லை என்பது எனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்பதை உணர்ந்துள்ளேன். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு இண்டியன்வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் போட்டிகளில் நிச்சயம் ஆடுவேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.  ஏப்ரல் கடைசி வாரத்தில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் ஆரம்பமாகின்றன. அதில் நிச்சயம் ஆடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்….

The post ‘ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’: டொமினிக் தீம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dominic Thiem ,Vienna ,Dominic ,Dinakaran ,
× RELATED சென்னை ஓபன் சேலஞ்சர் அரையிறுதில் சுமித் நாகல்