×

இலங்கையுடன் முதல் டெஸ்ட் இந்தியா இமாலய வெற்றி: பந்துவீச்சிலும் அசத்தினார் ஜடேஜா

மொகாலி: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175* ரன், பன்ட் 96, அஷ்வின் 61, ஹனுமா 58, கோஹ்லி 45 ரன் விளாசினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்திருந்தது. நிசங்கா 26 ரன், அசலங்கா 1 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது. அசலங்கா 29 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த டிக்வெல்லா 2 ரன்னில் வெளியேற… லக்மல், எம்புல்டெனியா, விஷ்வா, லாகிரு குமாரா ஆகியோர் டக் அவுட்டாகி அணிவகுத்தனர். இலங்கை அணி 65 ஓவரில் 174 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. அந்த அணி 13 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 13 ஓவரில் 4 மெய்டன் உள்பட 41 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். அஷ்வின், பும்ரா தலா 2, ஷமி 1 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 400 ரன் பின்தங்கிய நிலையில் ‘பாலோ ஆன்’ பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. திரிமன்னே (0), நிசங்கா (6) இருவரும் அஷ்வின் சுழலில் பலியாக, ஓரளவு தாக்குப்பிடித்த கேப்டன் கருணரத்னே 27 ரன் எடுத்து ஷமி வேகத்தில் வெளியேறினார்.தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன், சரித் அசலங்கா 20 ரன், ஏஞ்சலோ மேத்யூஸ் 28 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிரோஷன் டிக்வெல்லா அரை சதம் அடித்தார். அவருக்கு கம்பெனி கொடுத்த எம்புல்டெனியா 42 பந்தில் 2 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். விஷ்வா (0), லாகிரு குமாரா (4) வந்த வேகத்தில் வெளியேற, இலங்கை அணி 2வது இன்னிங்சில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (60 ஓவர்). டிக்வெல்லா 51 ரன்னுடன் (81 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அஷ்வின், ஜடேஜா தலா 4, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 222 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்திய இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா (175* ரன், 5+4 விக்கெட்) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.* கபிலை முந்தினார்டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில், கபில் தேவை முந்திய அஷ்வின் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கபில் 131 டெஸ்டில் 434 விக்கெட் கைப்பற்றி இருந்த நிலையில், அஷ்வின் தனது 85வது டெஸ்டில் (436) அந்த சாதனையை முறியடித்தார். அனில் கும்ப்ளே 132 டெஸ்டில் 619 விக்கெட் வீழ்த்தி முதலிடம் வகிக்கிறார். சர்வதேச அளவில் இலங்கையின் முரளிதரன் (800), ஷேன் வார்ன் (ஆஸி. 708) முதல் 2 இடங்களில் உள்ளனர். தற்போது 9வது இடத்தில் உள்ள அஷ்வின், அடுத்த டெஸ்டிலேயே டேல் ஸ்டெயின் சாதனையை (439) தகர்க்கும் வாய்ப்பு உள்ளது….

The post இலங்கையுடன் முதல் டெஸ்ட் இந்தியா இமாலய வெற்றி: பந்துவீச்சிலும் அசத்தினார் ஜடேஜா appeared first on Dinakaran.

Tags : India Himalaya ,Sri Lanka ,Jadeja ,Mohali ,India ,Himalayas ,Punjab ,India Himalayas ,Dinakaran ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...