×

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் பாஜவுக்கு 971 வார்டுகளில் டெபாசிட் காலி: சென்னையில் மட்டும் 170 பேர்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 971 வார்டுகளில் பாஜக டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. பல மாநகராட்சிகளில் போட்டியிட கூட ஆள் கிடைக்காமல் போட்டியிடாமல் ஒதுங்கியதும் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 200 வார்டுகளிலும் பாஜக சார்பில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி முதல் ரியல் எஸ்டேட் அதிபர்கள் வரை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். பாஜக வேட்பாளர்கள் மக்களுக்கு எதிராக மத அரசியலை முன்நிறுத்தியும், அரியலூர் மாணவி தற்கொலையை முதன்மைப்படுத்தியும் வாக்குகள் கேட்டனர். பல இடங்களில் பரிசு பொருட்கள், ஒன்றிய அரசின் திட்டத்தில் பல சலுகைகள் பெற்று தறுவதாக ஆசை வார்த்தைகள் கூறியும் பரிசு பொருட்கள் கொடுத்தும் வாக்கு சேகரிக்கப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒன்றிய அரசின் ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் பெற்று தருவதாக கூறி அதற்கான மாதிரி காசோலைகளில் பாஜக வேட்பாளர் கையெழுத்து போட்டு வீடு வீடாக வாக்கு சேகரித்த 2 பெண்கள் உட்பட 5 பாஜக பிரமுகர்களை பொதுமக்கள் பிடித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி 178 வார்டுகள் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக 15 இடங்கள், பாஜக 1 இடம், அமமுக 1 இடம் மற்றும் சுயேச்சைகள் 5 இடங்கள் கைப்பற்றினர். மத அரசியலை மட்டும் கையில் எடுத்து பிரசாரம் செய்து வந்த பாஜகவை மக்கள் புறக்கணித்தனர். 134வது வார்டில் மட்டும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்ற 199 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் உள்ள 10 வார்டுகளில் 2வது இடமும், 15 வார்டுகளில் 3வது இடத்திலும் பாஜக வந்துள்ளது. மற்ற 5 வார்டுகளில் பாஜக ஆயிரத்திற்கு கீழ் குறைவான வாக்குகள் பெற்று 4 மற்றும் 5வது இடத்தை பெற்றுள்ளது. மீதமுள்ள 170 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். பொதுவாக ஒரு வார்டில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6 விழுக்காடு வாக்குகளுக்கு குறைவான வாக்குகள் பெற்றால், அந்த வேட்பாளர் டெபாசிட் இழந்தவராக தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்படுவார். அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 170 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் கூட வாங்க முடியாமல் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  பாஜகவுக்கு ஆதரவாக குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட முன்னணி நடிகைகள், சின்னத்திரை நடிகைகள், ராதாரவி உள்ளிட்ட நடிகர்கள் வீதி வீதியாக வேட்பாளர்களுடன் டீ கடையில் மக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், மக்களிடையே சைக்கிள் ஓட்டியும் பிரசாரம் செய்தனர். அப்படி பிரசாரம் செய்தும் மக்கள் பாஜகவை ஏற்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மத அரசியலும், அரியலூர் மாணவி தற்கொலையை முன்னிலைப்படுத்தியும் பிரசாரம் செய்தது. ஆனால் மக்கள் இதை புறந்தள்ளி பாஜகவை தூக்கி எறிந்துள்ளனர்.சென்னையை ஒட்டியுள்ள ஆவடி மாநகராட்சியில் 35 வார்டுகள் உள்ளன. அதில் பாஜக 32 வார்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 50 வார்டுகளில் பாஜக 31 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது. அதில் 29 வார்டுகளில் பாஜக டெபாசிட்டை இழந்துள்ளது.  தாம்பரம் மாநகராட்சியில் 61 வார்டுகளில் பாஜ போட்டியிட்டது. இதில் 50 வார்டுகளில் பாஜ  டெபாசிட் இழந்துள்ளது. கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில், பாஜவினர் 97 வார்டுகளில் போட்டியிட்டனர். இதில் 84 வார்டுகளில் டெபாசிட்டை பறிகொடுத்தனர். 13 இடங்களில் மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் டெபாசிட்டை தக்க வைத்தனர்.ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில், 50 வார்டுகளில் பாஜ போட்டியிட்டது. இதில் 5வது வார்டில் மட்டுமே அதிமுக போட்டியிடாததால் டெபாசிட் தொகை பெற்றதோடு 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். மீதமுள்ள 49 வார்டுகளிலும் பாஜ டெபாசிட் இழந்தது. ஒரு சில வார்டுகளில் சுயேச்சைகளை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளில் ேபாட்டியிட்டு மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த பாஜ, 11 இடங்களில் மட்டுமே வென்றது. அதேசமயம் அந்த கட்சி 23 வார்டுகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. நெல்லை: நெல்லை மாநகராட்சியில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மூலம் கூடுதலாக இடங்கள் கிடைக்கும் என்ற நப்பாசையில் 43 இடங்களில் பாஜ வேட்பாளர்கள் களம் இறங்கினர். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. 31 இடங் களில் டெபாசிட் பறிபோனது.மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 99 வார்டுகளில் பாஜக போட்டியிட்டது. இதில் 89 வார்டுகளில் பாஜ வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். ஒரு இடத்தில் பாஜ வெற்றி பெற்றது. திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 28 வார்டுகளில் பாஜ போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 27 வார்டுகளில் டெபாசிட் தேறவில்லை.சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில், 18 இடங்களில் போட்டியிட்ட பாஜ, ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்று, 14 வார்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது.சேலம்: சேலம் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளிலும் பாஜ தனித்து போட்டியிட்டது. இதில் 56 வார்டுகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 30 வார்டுகளில் பாஜ சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 28 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.வேலூர்: வேலூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 35 வார்டுகளில் தனது வேட்பாளர்களை பாஜக நிறுத்தியது. இதில் 18வது வார்டில் மட்டும் 109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 வார்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பெற்றது. 24 வார்டுகளில் பாஜக டெபாசிட்டை பறிகொடுத்தது.திருச்சி: திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக 56 வார்டுகளில் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது.கரூர்: கரூர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 48 வார்டுகளில் 41 வார்டுகளில் மட்டும் பாஜக போட்டியிட்டது. 40 வார்டுகளில் பாஜக டெபாசிட்டை பறிகொடுத்தது.தஞ்சை: தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில், பாஜக 27 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் 31வது வார்டு பாஜக வேட்பாளர் ஜெய்சதீஸ் மட்டும் 1221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற 26 வார்டுகளில் டெபாசிட் இழந்தனர்.கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகளில், 24 வார்டுகளில் பாஜ போட்டியிட்டது. இதில் 20ல் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது.திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பாஜ வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 54 வார்டுகளில் பாஜ டெபாசிட்டை இழந்தது.கடலூர்: கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளில் பாஜக 28 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது. இதில் 28வது வார்டில் பாஜக வேட்பாளர் சக்திவேல் வெற்றி பெற்றார். 26 வார்டுகளில் டெபாசிட் இழந்தனர்.தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் பாஜ 52 வார்டுகளில் போட்டியிட்டது. இதில் 43 பாஜ வேட்பாளர்கள் பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 971 வார்டுகளில் பாஜக டெபாசிட் காலியாகியுள்ளது. மத்தியில் 8 ஆண்டுகள் ஆட்சியிலும், மாநிலத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியிலும் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக முதல் முறையாக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து 971 இடங்களில் டெபாசிட்டை பறி கொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது….

The post தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் பாஜவுக்கு 971 வார்டுகளில் டெபாசிட் காலி: சென்னையில் மட்டும் 170 பேர் appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,chennai ,Bajaka ,Bajavu ,Galle ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...