×

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு சென்னையில் 28ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப்  பட்டியல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து  வரும் 28ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று இந்திய மருத்துவம் மற்றும்  ஓமியோபதி துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவம்  மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய  மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக்  கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை,  திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் நாகர்கோவில் அருகே  கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில்  உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள்  ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.  இதேபோன்று 25 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,600 இடங்களில் 15 சதவீதம் அகில  இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம்  மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.  அரசு  ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார்  கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு  நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் ஒன்றிய  அரசு கலந்தாய்வு நடத்துகிறது. மேலும் சித்தா, ஆயுர்வேத, யுனானி,  ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) ஆகிய  பட்டப்படிப்புகளுக்கு 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப  விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த  டிசம்பர் 28ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஜனவரி 18ம் தேதி மாலை 5 மணி  வரை நடந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்களை  பதிவிறக்கம் செய்தனர். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த  ஆவணங்களுடன் கடந்த ஜனவரி 18ம் தேதி மாலை 5.30 மணி வரை செயலாளர்,  தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர்,  அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,  அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரியில் சமர்ப்பித்தனர். இதையடுத்து  விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின், தகுதியானவர்களுக்கான தரவரிசைப்  பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில்  நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப்  பட்டியலில் 3,721 பேர் இடம் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 720க்கு 625  மதிப்பெண்கள் எடுத்த சக்தீஸ்வரன் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்  பெற்றுள்ளார். 607 மதிப்பெண்களுடன் ஸ்ருதி இரண்டாம் இடத்தையும், 589  மதிப்பெண்களுடன் பட்டுஸ்ரீநிதி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அரசு  பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 82 இடங்கள்  ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு  தரவரிசைப் பட்டியலில் 378 பேர் இடம்பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு  இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 989 பேரும், தனியார் கல்லூரிகளின் அகில  இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 761 பேரும் இடம்  பிடித்துள்ளனர். இதையடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா  அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 28ம் தேதி தொடங்கி மார்ச் 8ம்  தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5  சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசைப் பட்டியல்கள்  மற்றும் கலந்தாய்வு தொடர்பான விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள   www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தை பார்த்து தெரிந்துக்  கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை  இயக்குநரகம் தெரிவித்துள்ளது….

The post சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு சென்னையில் 28ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Directorate of Omiopathy Department Announcement ,Department of Omiopathy Directorate ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...