×

மாவீரன் – திரைவிமர்சனம்

அருண் அஸ்வினின் சாந்தி டாக்கிஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின் சரிதா, யோகி பாபு, மதன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாவீரன்.

‘எதுவா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா’ . இப்படி எந்தச் சண்டை நடந்தாலும் அம்மாவையும், தங்கையையும் அடக்கி வீட்டிற்குள் பூட்டி வைத்து விட்டு கோழையாக வாழ்ந்து வரும் சத்யா ( சிவகார்த்திகேயன்). தனது கார்ட்டூன் வரையும் திறமையால் ஒரு நாளிதழில் வேலை செய்கிறார். அங்கே காமிக்ஸ் வரைவது தான் சத்யாவின் வேலை. தன்னை சுற்றி நடக்கும் எதார்த்த சூழலை கொண்டே காமிக்ஸ் வரையும் சத்யா. தான் வேலை செய்யும் நாளிதழில் ‘மாவீரன்’ என்னும் கதையை காமிக்ஸ் ஆக வரைய, அவர் வரையும் காமிக்ஸ் ஒரு கட்டத்தில் உண்மை சம்பவமாக மாறத் துவங்குகிறது. மேலும் சத்யாவின் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சனைகளையும் ஏராளமான ஆபத்துகளையும் கொண்டு வருகிறது முடிவு என்ன என்பது மீதிக்கதை.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் சிவகார்த்திகேயனின் அற்புதமான நடிப்பு. படம் முழுக்கவே கிட்டத்தட்ட பொம்மலாட்டம் போல் யாரோ சொல்வதைக் கேட்டு கேட்டு ரியாக்ஷன்களும், ஆக்சனும் செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் அத்தனைக்கும் ஈடு கொடுத்து மிக அற்புதமாகவே நடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டான்ஸ் மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் கூட மாஸ் காட்டுகிறார் இன்னும் ஒன்று இரண்டு படங்கள் தாண்டினாலே டாப் 5 நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்து விடுவார் என்பதில் ஐயமில்லை.

உனக்கு நான் முக்கியமா இல்ல வீடு முக்கியமா?’ என கதவை சாத்திக்கொண்டு அம்மா தங்கையிடம் புலம்புவதாகட்டும், ‘நீ தங்குவியா இந்த வீட்டில’ என எதிர்த்து நின்று கேள்வி கேட்பதாகட்டும் ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் படம் என்பதைத் தாண்டி பல இடங்களில் சிவகார்த்திகேயன் படமாகவே தெரிகிறது.

படத்தின் மற்றும் ஒரு ஹீரோவாகவே தெரிகிறார் வில்லன் மிஷ்கின். நடிப்பில் ஒரு பக்கம் சரிதா அசால்ட்டு காட்ட இன்னொரு பக்கம் மிஸ்கின் மாஸ் காட்டுகிறார். வில்லன் வில்லனாக மட்டுமில்லாமல் உடன் சில இடங்களில் சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்பிலும் இருப்பதால் தனது பாத்திரத்தை உணர்ந்து அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார் மிஷ்கின். இதற்கு முன்பு தமிழ் சினிமா எத்தனையோ அம்மாக்களை சந்தித்து இருக்கிறது ஆனால் சரிதா என்பதாலோ என்னவோ இயக்குனர் காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தி அவரின் கேரக்டரை வலிமையாக்கி இருக்கிறார். இத்தனை வருட காலமும் இப்படிப்பட்ட ஒரு நடிகையை தமிழ் சினிமா நிச்சயம் மிஸ் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அதிதி கிராமத்து கெட்டப்பில் இருந்து நகரத்துக் கெட்டப்பிற்கு புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கொஞ்சம் அதிகமாக பத்திரிகையாளராக வருகிறார். அலட்டிக் கொள்ளாமல் தனக்கு என்ன பாத்திரமோ அந்த மீட்டரில் மிக அழகாகவே நடித்திருக்கிறார். அழகான சிரிப்பும் அளவான நடிப்புமாக சில இடங்களில் அதிதி நிறைகிறார். மோனிகா பிளஸ்சி சிவகார்த்திகேயனின் தங்கையாக எத்தனையோ பெண்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறோம். ஆனால் மோனிகா சற்றே வித்தியாசம் தான் செரியில் இருக்கும் குட்டி பெண்ணாகவும், அதே சமயம் அண்ணனின் நிலை கண்டு அழுது புலம்பும் தங்கையாகவும், அம்மாவுக்கும் அண்ணனுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சிறு பிள்ளையாகவும் மோனிகா மனதில் நிறைகிறார். நிச்சயம் மோனிகாவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.

‘ மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் என்பதாலேயே சமூக கருத்து படத்தில் இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதையும் கூட புரிந்து கொண்டு அதிகம் கருத்துக்களாகவோ பிரச்சாரமாகவோ எதுவும் செய்யாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் குடும்ப ரசிகர்களையும் நிறைவு செய்யும் விதமாக நல்ல கமர்சியல் பேக்கேஜாக உடன் சமூகப் பிரச்னையுமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் மடோன். எந்த சம்பவம் நடந்தாலும் போலீஸ் துறை வராமல் இருப்பது, படத்தின் நாயகியே பத்திரிகையாளர் என்றாலும் எந்த இடத்திலும் மீடியாக்கள் தென்படாமல் தெரிவது என சின்னச் சின்ன லாஜிக்குகள் ஆங்காங்கே இடிக்கத்தான் செய்கின்றன.
எனினும் பேண்டஸி திரைப்படம் என வெளியிட்டிருக்கு முன்பே சொல்லிவிட்டதால் அந்த லாஜிக்குகளும் பளிச்சென தெரியாமல் மறைந்து விடுகின்றன.

படத்திற்கு மற்றும் ஒரு உயிர் நாடி விது ஐயனாவின் ஒளிப்பதிவு, மற்றும் பரத் சங்கரின் இசை. குறிப்பாக மிஷ்கினின் தீம் மியூசிக், படத்தின் இறுதியில் வரும் குத்து பீட் என படம் முடிந்த பிறகும் காதிற்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பாடல்கள் படம் முழுக்க இருப்பினும் கூட எங்கேயும் நம்மை இடையூறு செய்யாதவாறு உடனடி கட் கொடுத்திருக்கிறார் எடிட்டர் பிலோமின் ராஜ். இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் என்றாலும் படத்தின் நீளம் நம்மை பெரிதாக உறுத்தவில்லை. இன்னொரு நாயகனின் அதிலும் தனக்கு போட்டியாக கருதப்படும் நடிகனின் படம் என கொஞ்சமும் ஈகோ காட்டாமல் படம் முழுக்கவே தனது குரலால் ஆக்கிரமித்து இருக்கிறார் விஜய் சேதுபதி பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஃபேண்டஸி திரைப்படம் என்றாலும் அதிலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனையை கருத்தில் எடுத்துக் கொண்டு, அதிலும் கமர்சியல் கலர்ஃபுல் காட்சிகள் காமெடி என கையாண்ட இடத்தில் இயக்குனர் மடோன் அஸ்வின் மீண்டும் பாராட்டுக்கள் பெறுகிறார். குடும்பமாக கொண்டாட நல்லதொரு திரைப்படம் ‘ மாவீரன் ‘

The post மாவீரன் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arun Ashwin ,Madon Ashwin ,Sivakarthikeyan ,Aditi Shankar ,Myshkin Saritha ,Yogi Babu ,Madan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’- சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா