×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு முடிவு தெரியும்: 268 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்படுகிறது. காலை 10 மணி முதல் முடிவு தெரியவரும். வாக்கு எண்ணப்படும் இடங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, ேகாவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த சனிக்கிழமை (19ம் தேதி) தேர்தல் நடந்தது. 12,870 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 57,746 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், அரியலூரில் 75.69 சதவீதம், கடலூரில் 71.53 சதவீதம், திண்டுக்கல் 70.65 சதவீதம், ஈரோடு 70.73 சதவீதம், கள்ளக்குறிச்சி 74.36 சதவீதம், கரூர் 76.34 சதவீதம், நாமக்கல் 71.66 சதவீதம், ராணிப்பேட்டை 72.24 சதவீதம், சேலம் 70.54 சதவீதம், தென்காசி 70.40 சதவீதம், திருவண்ணாமலை 73.46 சதவீதம், விழுப்புரம் மாவட்டத்தில் 72.39 சதவீதம் வாக்குகள் பதிவானது. குறைந்த பட்சமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவானது. பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலில் போட்டியிடும் அந்தந்த கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 268 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெப் கேமரா மூலம் 24 மணி நேரமும் போலீசார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணும் மையங்களின் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் 30 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதன் பின்னர் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தொடர்ந்து உடனுக்குடன் முடிவுகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 மணி நேரத்தில், அதாவது 10 மணியளவில் முடிவு நிலவரம் தெரியவரும். பிற்பகல் 12 மணிக்கு பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் முழு விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ்களை அளிப்பார்கள். வாக்கு எண்ணும் மையங்களில் காவலர் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர், முகவர்கள் என அனைவரும் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள், முகவர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு தனியாக தேர்தல் ஆணையம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தாராளமாக உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரம் அறிவிக்கும்போது, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி,, பச்சையப்பன் கல்லூரி, விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி என மொத்தம் 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைகளில் 4 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் சுழற்சி முறையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக 38 தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதாவது வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். தேவையான எண்ணிக்கையில் வாக்கு எண்ணும் அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பு செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும். தடையில்லா மின்சார வசதி, கணினி வசதிகள் உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் உத்தரவு பிறப்பித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற பரபரப்பு வாக்குப்பதிவு முடிந்ததில் இருந்து ஒவ்வொருவரிடமும் தொற்றியுள்ளது. இன்று காலை 8 மணிக்கு பிறகு மேலும் இந்த பரபரப்பு அதிகரிக்க கூடும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் வருகிற 2ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்பார்கள். தொடர்ந்து 4ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும். இதில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக கடந்த 19ம் தேதி நடந்தது.* தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.* சென்னையில் 15 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு முடிவு தெரியும்: 268 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Local Elections ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...