×

தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 10 கோடியை எட்டும்: சனிக்கிழமை 23வது மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40,169 பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தைப் போல 10 கோடி அளவுக்கு தமிழகத்திலும்  வரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை  இருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, அரும்பாக்கத்தில் திருநங்கைகளே நடத்தும் ‘நம்ம கபே’ சிற்றுண்டி உணவகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏ மோகன் மற்றும் பகுதிச் செயலாளர்கள் பரமசிவம், ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  நம்ம கபே என்கிற உணவகம் புதுமாதிரி தோற்றத்தோடு ஏற்கனவே 19 கிளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 20-வது கிளை முற்றிலும் வித்தியாசமாக திருநங்கைகள் நடத்துவதற்கு உரிய அமைப்பாக மாற்றி, அவர்களுக்கு இந்த கிளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுத்து, அவர்களை தமிழகத்தில் சிறப்பித்து வருகிறார். திருநங்கைகளைப் பார்த்து அனுதாபப்படுவதை விடவும், இரக்கப்படுவதை விடவும் அவர்களை தொழில் விற்பன்னர்களாக மாற்றி அவர்களுக்கும் சமுதாயத்தில் முக்கிய பங்களிக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு இந்த ‘நம்ம கபே’ உணவக கிளையை சி.கே.குமரவேல் தந்திருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விசயமாகும். தமிழகத்தில் இருக்கிற திருநங்கைகள் அனைவரும் இதுபோன்ற புதிய, புதிய உத்திகளுடன்கூடிய தொழில்முனைவோராக ஆக வேண்டும். பொதுமக்களும் அவர்களுக்கு ஆதரவை நலகிட வேண்டும். முதல்வரின் தீவிர நடவடிக்கையினால் தமிழகத்தில் கொரோனாத் தொற்றின் அளவு ஆயிரத்துக்கும் கீழே குறைந்திருக்கிறது. மிக விரைவில் பூஜ்ஜிய எண்ணிக்கையை அடையும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 92 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசியை 72 சதவீதத்தினர் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்திய அளவில் 175 கோடி அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40,169 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குஜராத்தைப் போல 10 கோடி அளவுக்கு தமிழகத்திலும் வரும் வாரங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.மேலும் வரும் சனிக்கிழமை 23வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்தி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் செலுத்திக் கொள்ளலாம். தினந்தோறும் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்புடன் பல லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தார்கள். அதுபோல் தற்போதும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் நிலுவையில் இருப்பதால், இலவச தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்….

The post தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 10 கோடியை எட்டும்: சனிக்கிழமை 23வது மெகா தடுப்பூசி முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vaccination ,Minister ,M. Subramanian ,Chennai ,Gujarat ,Subramanian ,
× RELATED ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா...