×

ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு: 900 தன்னாட்சி கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி

புதுடெல்லி: ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு பயில 900 தன்னாட்சி கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது. பொதுவாக 12ம் வகுப்பு முடிக்கும்போது மதிப்பெண்கள் அதிகமாக பெற்றிருந்தும், தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் சேர முடியவில்லையே என்ற நிலை மாணவர்களுக்கு இருந்து வந்தது. அப்படிப்பட்ட மாணவர்கள், வேறு வழியில்லாமல் ஏதாவது கல்லூரியை தேர்வு செய்து படிப்பார்கள். அந்த நிலையை போக்கும் வகையில் தற்போது ஆன்லைன் வழியில் பட்டப்படிப்பை வழங்க 900 தன்னாட்சி கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. இந்த ஆன்-லைன் வழியில் படிக்கும் பட்டப்படிப்பு, நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக கருதப்படுவார்கள். விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. முன்னதாக பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளில் சேரலாம் என்கிற நடைமுறை இருந்தது. தற்போது இதை மாற்றி 900 கல்லூரிகளில் நாடு முழுவதும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. ஆன்-லைன் வழியில் பட்டப் படிப்புகளில் சேரும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானிய குழு யுஜிசி அமல்படுத்த உள்ளது. புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியமாகும். ஆன்-லைன் வழி பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானிய குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், ஆன்லைன், திறந்தநிலை பல்கலைக்கழகம்  மற்றும் வழக்கமான பட்டங்கள் சம மதிப்புடையதாக இருக்கும். இவை அனைத்தும் அடுத்த 13 ஆண்டுகளில் தேசிய கல்வி கொள்கையின் இலக்குக்கு ஏற்ப இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன. அணுகல், சமபங்கு, தரம், மலிவு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய 5 தூண்களின் மீது கட்டப்பட்ட தேசிய கல்வி கொள்கை போல, ஆன்லைன் கல்வி சுற்றுச்சூழல் அமைப்பும் உருவாக்கப்படும். புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது அனைத்து தன்னாட்சி கல்லூரிகளும் ஆன்லைன் கல்வியை வழங்குவதை செயல்படுத்துவதாகும். இது கல்வி கற்பவர்களின் எண்ணத்தை மேம்படுத்தும். இந்த ஆன்லைன் பட்டங்கள் எந்தவொரு இயற்பியல் பல்கலைக்கழகத்திலும் பெறப்பட்ட பட்டங்களைப் போலவே இருக்கும்’ என்றார்….

The post ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு: 900 தன்னாட்சி கல்லூரிகளுக்கு யுஜிசி அனுமதி appeared first on Dinakaran.

Tags : UGC ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் போலி பல்கலைகள் எதுவும் கிடையாது: யுஜிசி தகவல்