×

அரிமளம் அருகே கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 5 பேர் காயம்

திருமயம் : அரிமளம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் வாலிபர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வாளரமாணிக்கம் பெரியநாயகி அம்பாள், கைலாச நாதர் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு போசம்பட்டி கிராமத்தார்களால் 6ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 14 மாடுகள் கலந்துகொண்டன. வடமாடு மஞ்சுவிரட்டுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த திடலில் ஒவ்வொரு மாடாக நீண்ட கயிற்றில் கட்டி களம் இறக்கினர். இந்த மாட்டை அடக்க 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர் குழு களத்தில் இறக்கிவிடப்பட்டனர். ஒவ்வொரு மாட்டை அடக்க குழுவுக்கு தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாடுபிடிவீரர்கள் மாட்டை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கம் மற்றும் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அதே போல் மாடு வீரர்கள் கையில் சிக்கவில்லை என்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவித்து மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் மாடு முட்டியதில் கைலாசநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா(20) பலத்த காயமடைந்தார். காயமடைந்த கருப்பையாவை விழா குழுவினர் மீட்டு ஆம்புலன்சில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாடு முட்டியதில் 5 மாடுபிடி வீரர்கள் லேசான காயமடைந்தனர். லேசான காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவகுழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். வடமாடு நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை போசம்பட்டி இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

The post அரிமளம் அருகே கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி வாலிபர் பலி: 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manjurudrat ,festival ,Arrimalam ,Valibur ,Arimalam ,Temple Festival ,Aniram ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!