பாட்னா: ‘அதிகாரத்தை உறுதிப்படுத்த மதக்கலவர பதற்றத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்களின் புதிய அவதாரம்தான் பாஜ,’ என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிகாரத்துக்காக யாருடனும் கூட்டணி வைப்பதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எந்த கவலையும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தாவூத் இப்ராகிமுடன் கூட கைகோர்க்க முடியும் என்று சொல்லும் அளவுக்கு பாஜ எம்பி சேடி பஸ்வான் போயிருக்கக் கூடாது. பீகாரில் பாஜ-ஜேடியு கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப மதவெறியை பாஜ தூண்டிவிட்டுள்ளது. ஒரு சமூகத்தினருக்கு எதிராக மற்றொரு சமூகத்தை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்களை நம் முன்னோர்கள் விரட்டியடித்தனர். இவர்கள் (பாஜ) ஆங்கிலேயர்களின் புதிய அவதாரம். கட்சியின் எதிர்கால யுக்தி குறித்து நாளை (இன்று) நடைபெறும் தேசிய செயற்குழுவில் வெளியிடப்படும். இம்மாத இறுதியில் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெறும். இவ்வாறு லாலு கூறினார். இறுதியாக, பீகாரில் காங்கிரசுடன் லாலு கட்சிக்கு சமீப காலமாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘நான் இப்போது விடைபெறுகிறேன். நீங்கள் குறும்புத்தனம் செய்யத் தொடங்கி விட்டீர்கள்’’ என தனது வழக்கமான சிரிப்புடன் எழுந்து சென்றார்….
The post ஆட்சிக்காக மதக்கலவரம் ஆங்கிலேயர்களின் அவதாரம் பாஜ: லாலு கடும் தாக்கு appeared first on Dinakaran.
