×

நீட் தேர்வு என்பது பலிபீடம்!: சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?..மு.க.ஸ்டாலின் காட்டம்..!!

சென்னை: நீட் என்ற சமூக அநீதி நிச்சயம் அகற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அதே தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. நீட் விலக்கு மசோதாவுக்கு இதுவரை அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், தவாக, கொமதேக, மமக ஆதரவு தெரிவித்துள்ளது. மசோதா தொடர்பான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையை காப்பாற்றுவதற்காக கூடியிருக்கிறோம். கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக கூடியிருக்கிறோம். எனது பொதுவாழ்வில் மறக்க முடியாத நாளாக இது உள்ளது என்று கூறினார். 100 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதிக்கு அடித்தளம்:100 ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதிக்கு அடித்தளம் போட்டது இந்த சட்டமன்றம் என்று முதல்வர் தெரிவித்தார். அகில இந்திய அளவில் மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்பட வைத்தது இந்த சட்டமன்றம். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அளித்தது இந்த சட்டமன்றம். 69 சதவீதம் இடஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல்முறையாக செயல்படுத்தி சாதனைப்படுத்தியது இந்த சட்டமன்றம் தான். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தியது இந்த சட்டமன்றம் தான். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது என்று கூறினார். சமூகநீதியை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம்:நீட் என்ற சமூக அநீதியை அகற்ற சட்டமன்றத்தால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு சமூகநீதியை நிலைநாட்டிட கூடியிருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தால் உருவான தேர்வுமுறை அல்ல நீட்:நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கிய தேர்வு முறை அல்ல. 2010ம் ஆண்டு தேர்வு முறை முன்மொழியப்பட்டபோதே திமுக கடுமையாக எதிர்த்தது. நீட் தேர்வு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று 2013ல் உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ல் பாஜக ஆட்சி மத்தியில் வந்தபோது அவசர சட்டம் மூலமாக நீட் தேர்வை கொண்டு வந்தது. நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக அரசுதான்:நீட் தேர்வை அமல்படுத்தியது பாஜக அரசுதான். நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களுக்கு சாதகமானது; அவர்களின் நன்மைக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் பயிற்சி பெற முடியாதவர்களை மருத்துவம் படிக்க முடியாமல் நீட் தேர்வு தடுக்கிறது. ஆள்மாறாட்டம், விடைத்தாளில் திருத்தம் உள்ளிட்ட அனைத்து விதமான முறைகேடுகளும் நீட் தேர்வில் நடந்துள்ளன. நீட் முறைகேடு பற்றி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீட் தேர்வு என்பது பலி பீடம்:நீட் தேர்வு வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை; பல்வேறு குளறுபடிகளுடன் ஏழை மாணவர்களை ஓரம்கட்டவே கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு என்பதை விட, அது மாணவர்களை கொல்லும் பலி பீடம் என்றே சொல்ல வேண்டும். சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல என்றும் சாடினார். ஆளுநரின் கூற்று தவறானது:பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை யூகங்களின் அடிப்படையிலானது என்று ஆளுநர் கூறியிருப்பது தவறானது. தனிப்பட்ட சிலரின் யூகங்களின் அடிப்படையில் அல்ல. ஒரு லட்சம் பேரின் கருத்துக்களை கேட்டே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தயார் செய்துள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவில் எந்த விவரங்களும் யூகங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை. 7.5% ஒதுக்கீட்டில் பயன்பெற்றவர்கள் நீட் தேர்வால் பயன்பெற்றவர்கள் அல்ல: 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை, நீட் தேர்வால் பயன்பெற்றவர்கள் என கருதக்கூடாது. நீட் என்பது கல்விமுறை அல்ல. அது ஒரு பயிற்சி முறை. தனியார் பயிற்சி நிலையங்களை இது ஊக்குவிக்கும். நீட் தேர்வு மாபெரும் அறிவுத் தீண்டாமை: நீட் தேர்வு பயிற்சி பெறக்கூடியவர்கள், பயிற்சி பெற முடியாதவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி உள்ளது. கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாதவர்களால், மருத்துவப் படிப்பில் நுழைய முடியாது என்பது மாபெரும் அறிவுத்தீண்டாமை. ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற வழக்குக்கும், தமிழ்நாடு மசோதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை:ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற வழக்குக்கும், தமிழ்நாடு மசோதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநில அரசுக்கான அதிகாரம் பற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வு தேர்வு பாகுபாட்டை  உருவாக்குகிறது:சமத்துவம் என்பது தான் அரசியலமைப்பு சட்டத்தின் அடிநாதம். நீட் தேர்வு சமத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டம் பாகுபாடு கூடாது என்கிறது; ஆனால் நீட் தேர்வு பாகுபாட்டை உருவாக்குகிறது. நீட் தேர்வு சமத்துவத்துக்கு முற்றிலும் முரணானது. நீட் தேர்வின் மோசமான அம்சங்களை 5 ஆண்டாக விளக்கி கொண்டிருக்கிறோம். இன்னும் சிலருக்கு புரியவில்லை. நீட் தேர்வு பாதிப்பை உண்மையில் உணர்ந்துகொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது:சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. ஆளுநர் முடிவு மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாவை நியமன ஆளுநர் திருப்பி அனுப்புவது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியா பண்பாட்டை சிதைக்கலாமா? என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். சமூக நீதி, மாநில சுயாட்சி திராவிட இயக்க கொடை:சமூக நீதி மட்டுமல்ல, மாநில சுயாட்சியும் திராவிட ஆட்சியின் கொடை தான். மாநில சுயாட்சியை நிலைநாட்ட அண்ணா, கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். …

The post நீட் தேர்வு என்பது பலிபீடம்!: சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?..மு.க.ஸ்டாலின் காட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : M.K.Stalin ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,NEET ,Tamilnadu Legislative Assembly ,
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு