×

தர்மஸ்தலாவில் தோண்டப்பட்ட 9,10ம் இடங்களிலும் எதுவும் சிக்கவில்லை

பெங்களூரு கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. டிஜிபி பிரணாவ் மொஹந்தி தலைமையில் எஸ்.ஐ.டி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. புகார்தாரரிடம் விசாரணை நடத்தி, பின்னர் அவரை சம்பந்தப்பட்ட நேத்ராவதி ஆறு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று, உடல்கள் புதைக்கப்பட்டதாக புகார்தாரர் காட்டிய 13 இடங்கள் குறிக்கப்பட்டன. பின்னர் அந்த இடங்கள் ஒவ்வொன்றாக தோண்டப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வரை தோண்டப்பட்ட 8 இடங்களில் ஒரு நபருடைய உடல் பாகங்களின் 12 எலும்புகளும், ஒரு மண்டை ஓடும் மட்டுமே கிடைத்தன. நேற்று காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு இடங்கள் தோண்டப்பட்டன. சாலையோரம் உள்ள காட்டுப்பகுதியில் இந்த இடங்கள் இருந்ததாலும், விசாரணையில் ரகசியம் காக்கும் நோக்கிலும், 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் முழுமையாக திரையிட்டு மறைக்கப்பட்டு தோண்டப்பட்டன. 9 மற்றும் 10ம் இடங்களிலும் எதுவும் கிடைக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 13வது இடத்தில் நிறைய சடலங்கள் கிடைக்கும் என்றும், குறிப்பாக பள்ளி மாணவி ஒருவர் அங்கு புதைக்கப்பட்டிருப்பதாகவும் புகார்தாரர் கூறியிருக்கிறார். அவர் காட்டிய அனைத்து இடங்களிலும் முழுமையாகத் தோண்டி உண்மையைக் கண்டறியும் முனைப்பில் இருக்கும் எஸ்.ஐ.டி, இன்றைய தினம் எஞ்சிய இடங்களில் தோண்டும் பணிகளை தொடர இருக்கின்றனர்.

The post தர்மஸ்தலாவில் தோண்டப்பட்ட 9,10ம் இடங்களிலும் எதுவும் சிக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : Dharmasthala ,Dharmasthala, Bengaluru, Karnataka ,SIT ,DGP ,Pranav Mohanty ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...