×

அமெரிக்கா 25 சதவீத வரி விதிப்பு எதிரொலி; உள்ளூர் பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வாரணாசி: அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ள நிலையில் உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான உபி மாநிலம் வாரணாசியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியான 26 பேருக்காக நான் பெரும் துயரமடைந்தேன். இதனால் நமது மகள்களின் சிந்தூருக்குப் பழிவாங்குவதாக நான் அளித்த வாக்குறுதி மகாதேவியின் ஆசீர்வாதத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை மகாதேவியின் பாதங்களின் அர்ப்பணிக்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் ருத்ர தாண்டவத்தை உலகம் பார்த்தது. எங்களை தாக்கத் துணிந்த எவரையும், அவர்கள் பாதாள உலகத்திற்கே சென்றாலும் இந்தியா விட்டுவிடாது என்கிற தெளிவான செய்தி தரப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை நாடு கொண்டாடும் அதே வேளையில், நம் நாட்டில் சிலர் கவலைப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளால், பாகிஸ்தானுக்குள் தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்ததை ஜீரணிக்க முடியவில்லை. பாகிஸ்தானில் உள்ள பல விமானத் தளங்கள் இன்னும் ஐசியுவில் உள்ளன. இதில் பாகிஸ்தானின் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தாலும், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களும் வேதனை அடைவது தான் அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆயுதப்படைகளின் வீரத்தை மீண்டும் மீண்டும் அவமதித்து, ஆபரேஷன் சிந்தூர் ஒரு காமெடி என்கிறது. சிந்தூர் எப்போதாவது ஒரு காமெடியாக இருக்க முடியுமா? அவர்கள் நம் சகோதரிகளின் புனித அடையாளத்தையும், நம் வீரர்களின் வீரத்தையும் அவமதிக்கத் துணிந்தார்கள். தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவதால் இப்போது கலக்கமடைந்துள்ளனர்.

இது புதிய இந்தியா. சிவபெருமானை வணங்கும் இந்தியா. தேவைப்படும்போது கால பைரவரை எதிரிகளுக்கு எதிராக மாற்றுகிறது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை உலகிற்கு நிரூபித்துள்ளது. எங்கள் பிரம்மோஸ் ஏவுகணை எதிரிகளிடம் பயத்தை விதைத்துவிட்டது. பாகிஸ்தானில் உள்ள மக்கள் தங்கள் கனவில் கூட நிம்மதியாக தூங்க முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்: இந்தியா உள்ளிட்ட சுமார் 70 நாடுகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

வாரணாசியில் அவர் பேசுகையில், ‘‘உலகப் பொருளாதாரம், உறுதியற்ற, நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது. இதுபோன்ற சமயங்களில் உலக நாடுகள் தங்கள் சொந்த நலனில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இந்தியாவும் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் உள்ளது. இதற்காக அரசு முடிந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது. இதில் மக்களுக்கான பொறுப்பு, உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி உள்ளூர் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே. உள்ளூர் கடைகள் மற்றும் சந்தைகளில் இருந்து சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுப்போம்’’ என்றார்.

விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி நிதி
ரூ.2,000 கோடி மதிப்பிலான வாரணாசி தொகுதி மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 20வது தவணைக்காக ரூ.20,500 கோடியை விடுவித்து விவசாயிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 9.70 கோடிக்கும் மேற்பட்ட தகுதியுள்ள விவசாயிகள் பலனைவர்.

The post அமெரிக்கா 25 சதவீத வரி விதிப்பு எதிரொலி; உள்ளூர் பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : US ,PM Modi ,Varanasi ,Modi ,Lok Sabha ,UP ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...