×

தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை ஐஐடி இணைந்து செமி கண்டக்டர் உயர்திறன் பேப்ரிகேஷன் யூனிட் அமைக்கும் பணிகள் தொடக்கம்

* 2000 முதல் 4000 மாணவர்களுக்கு பயிற்சி
* டப்ளின் போல தமிழகம் உருவாகும் என அமைச்சர் டிஆர்பி.ராஜா பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை ஐஐடி இணைந்து செமி கண்டக்டர் உயர்திறன் பேப்ரிகேஷன் யூனிட் மூலம் இன்னும் 5 மாதத்தில் 2 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது. தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் – 2030 எனும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு, பரிசோதனை மையத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் தொழில்துறை செயலர் அருண்ராய் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: இந்த முயற்சிகளின் மூலம் புதிய தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள் உருவாகும். இதில் செயல்முறை நிபுணர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் fabrication தொடர்பான பணியாளர்கள் அடங்குவர். இது தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்களது செயல்திறனை மேம்படுத்தும் வாய்ப்பாக இருக்கும். 2030ம் ஆண்டில் இற்கான மனிதவளத் திட்டம் “School of Semiconductor Initiative” என்ற பெயரில் செயல்படும். இது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக நடக்கிறது.

உலக அளவிலும் இது ஒரு புதிய முயற்சி என்று நினைக்கிறேன். இந்த முயற்சியின் ஒரு முதல் கட்டமாக, உயர் நிலை செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பேப்ரிகேஷன் செயல்முறையில் (fabrication process) பயிற்சி அளிக்க இந்தியாவில் முதல்முறையாக திட்டமிடப்பட்டதாகும். இந்த மையம் தமிழ்நாடு அரசால், ஐஐடி மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு ஆரம்ப கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த மையத்தில் சிறிய அளவிலான உற்பத்தி உபகரணங்கள் அமைக்கப்படும். இதனால் உள்ளூர் திறன்கள் வளர்ச்சியடையும், மேம்பட்ட ஆராய்ச்சி நடைபெறும், தொழில்நுட்பம் வளர்ச்சி பெறும், தயாரிப்பு முன்மாதிரிகள் உருவாகும் மற்றும் புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இந்த மையம் தரமணியில் உள்ள மத்திய தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் (central campus) அமைக்கப்படும். இது ஒன்றிய அரசின் மின் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும். இந்த மையம் ஆரம்பத்தில் 2000 பேருக்கு பயிற்சி அளிக்கும். பின்னர் இதை 4000 பேர் வரை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். முதற்கட்ட பயிற்சி பெறுவோர் தான் எங்கள் முதன்மை இலக்காக இருப்பார்கள். அவர்கள் 2 முதல் 6 வாரங்கள் வரை இருக்கும் குறுகிய கால பயிற்சி திட்டங்களில் நிபுணத்துவம் பெறுவார்கள். இது மிகத் தீவிரமான பயிற்சி ஆகும்.

இதன்மூலம் நம்மால் விரைவாகவே இந்த திறமைமிக்க மனிதவளத்தை உருவாக்க முடியும். இந்த மையம் மின்வாகனங்கள், ஏரோஸ்பேஸ் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயன்படும் நிபுணர்களை உருவாக்கும். உலக அளவிலும் போட்டியிடக்கூடிய திறமைமிக்க தொழில்நுட்ப ஊழியர்களை தமிழ்நாட்டிலேயே உருவாக்குகிறோம். இந்த பயணமே இப்போது ஆரம்பிக்கிறது. நமக்கு திறமை இருக்கிறது, கட்டமைப்பு இருக்கிறது, நம்மை நீண்ட நேரம் பின்தள்ள முடியாது. டப்ளின் (Dublin)-ஐ போலவே, தமிழகம் தான் செமிகண்டக்டர் தொழில்துறையின் தலைநகரமாக உருவாகப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியதாவது: தமிழ்நாடு அரசு ஐஐடி மெட்ராஸ் இணைந்து ஒரு பயிற்சி மையத்தை உருவாக்க உள்ளோம். ஐஐடி மெட்ராஸ் மற்றும் தொழில்துறையின் கைடன்ஸ் நிறுவனம் இணைந்து தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் முதலீட்டில் பயிற்சி மையத்தை உருவாக்குகிறோம். இந்தியாவில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு செயல்முறை உள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்துவது தமிழகத்திற்கு வரவேண்டியது.

ஒரு சில காரணங்களால் தமிழ்நாட்டுக்கு வராமல் வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. உலக அளவில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு இது ஏற்படுத்திக் கொடுக்கும். நம் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். குறிப்பாக, வெளி நாடுகளில் பயணம் செய்யும் போது அங்கே தமிழ்நாட்டு இளைஞர்களை பணிக்காக அழைக்கின்றனர். எனவே இங்கே ஏற்கனவே மாணவர்களுக்கு தேவைப்படுவோருக்கு ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கற்றுக்கொடுக்க செய்து வேலை வாய்ப்புகளை உலக அளவில் உருவாக்கி கொடுப்பதே எங்கள் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது: மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு 20 நாட்கள் முதல் ஒன்றரை மாதத்திற்கு உள்ளாக சிறப்பான ஒரு பயிற்சியை இந்த முயற்சி மூலம் அளிக்க உள்ளோம். அந்த சிப்பை எப்படி உருவாக்குவது, எப்படி பாக்கெட் செய்து செயல்முறைப்படுத்துவது உள்ளிட்ட பயிற்சியை வழங்க உள்ளோம். பல ஆயிரக்கணக்கான மாணவர்களை பயிற்சிக்கு உட்படுத்தினால் அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் இதற்கான செயல்முறையை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய உள்ளோம். இந்த யூனிட் தரமணி வளாகத்தில் அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை ஐஐடி இணைந்து செமி கண்டக்டர் உயர்திறன் பேப்ரிகேஷன் யூனிட் அமைக்கும் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,IIT Chennai ,Minister ,TRP Raja ,Tamil Nadu ,Dublin Chennai ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...