×

பதிவுத்துறை சார்பில் ரூ.22.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.07.2025) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 27 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாநிலவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரண்டு புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக வணிகவரித்துறை விளங்கி வருவதோடு, வரி வசூல் மற்றும் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனையும் உறுதி செய்து வருகிறது. மேலும், பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

2 மாநிலவரி அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்
வணிகவரித் துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் 2 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மாநிலவரி அலுவலகக் கட்டடங்கள்;

12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, இராமநாதபுரம் மாவட்டம் – பெருநாழி மற்றும் கமுதி; தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை மற்றும் ஆழ்வார்திருநகரி; திருநெல்வேலி மாவட்டம் – வடக்கு வீரவநல்லூர் மற்றும் முக்கூடல்; தர்மபுரி மாவட்டம் – பென்னாகரம்; கடலூர் மாவட்டம் – பெண்ணாடம் மற்றும் குமராட்சி; தென்காசி மாவட்டம் – சிவகிரி ஆகிய இடங்களில் 22 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் 27 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைக்கு புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தல்
2024-2025-ஆம் ஆண்டிற்கான முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, செங்கல்பட்டு பதிவு மாவட்டம், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 64 கிராமங்களில் 9 கிராமங்களை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் சார்பதிவாளர் அலுவலகத்தையும் மற்றும் 13 கிராமங்களை பிரித்து புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இப்புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான பதிவுத்துறை சேவைகளை அளிக்க இயலும்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன், இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., வணிகவரி இணை ஆணையர் (நிர்வாகம்) மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பதிவுத்துறை சார்பில் ரூ.22.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.U. ,Registry Department ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Secretariat ,Commercial Tax and Registry Department ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது