×

கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடியில் பாரா-விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்

கடலூர், ஜூலை 30: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா-விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் நேரு பூங்கா விளையாட்டு வளாகம் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் மொத்தம் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் நேரு பூங்கா வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலும், இதர 5 மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் பாரா-விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தை பொறுத்தவரை பாரா-விளையாட்டு மைதானம் அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து ஆடுகளம், உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா டேபிள் டென்னிஸ் ஆடுகளம், பாரா போச்சியா ஆடுகளம், பாரா டேக்வொண்டோ ஆடுகளம், பாரா ஜூடோ ஆடுகளம், பாரா கோல்பால் ஆடுகளம், பாரா பளுதூக்குதல் பகுதி ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலக கட்டிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் வரும் பாரா-விளையாட்டு மைதானம் அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா போச்சியா ஆடுகளம், பாரா கோல்பால் ஆடுகளம், பாரா பந்து எறிதல் ஆடுகளம் ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலக கட்டிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் பாரா பேட்மிண்டன் மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief ,Udayanidhi Stalin ,Cuddalore ,Deputy Chief Executive Officer ,Udayaniti Stalin ,Chennai ,Nehru Park Sports Complex ,Trichy ,Madurai ,Tirunelveli ,Salem ,Chennai district ,
× RELATED மயிலம் அருகே மரத்தின் மீது தனியார் பஸ் மோதி விபத்து: 7 பேர் காயம்