×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவின் தீர்ப்பு: ஐகோர்ட் தள்ளிவைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் கொலை இல்லை. இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என்று காவல்துறை தரப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்ததுடன் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவின் தீர்ப்பு: ஐகோர்ட் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CBI ,High Court ,Chennai ,Bahujan Samaj Party ,president ,general secretary ,Armstrong's… ,Dinakaran ,
× RELATED சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத்...