×

தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும்: பாஜவை வளர்க்க கூடிய எந்த கூட்டணியும் தமிழக மக்களுக்கு நன்மை தராது

சென்னை: தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். பாஜவை வளர்க்க கூடிய எந்த கூட்டணியும் தமிழக மக்களுக்கு நன்மை தராது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தார். பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர். இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், “ தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்\\” என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்க ஓ,பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கவில்லை. ஓபிஎஸ் கடிதம் எழுதியும் பிரதமர் அவரை சந்திக்காமல் தவிர்த்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏற்கெனவே அமித்ஷா 2 முறை தமிழகம் வந்தபோதும் அவரை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அவர் வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதேபோல் இதனுடன் சேர்த்து பிரதமர் மோடி 2 முறை தமிழகம் வந்தபோதும் ஓபிஎஸ்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டி:
தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் வெளியேற வேண்டும். ஓபிஎஸ்சை பாஜ புறக்கணிக்கிறது. அதை அவர் வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜவை வளர்க்க கூடிய எந்தக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை தராது. அந்த கூட்டணியில் ஓபிஎஸ்சுக்கு நன்மை இல்லை. மதியாதார் வாசலை மிதிக்க மாட்டேன் என கும்பிடு போட்டு வெளியே வருவதே நிம்மதி. தேசிய ஜனநாயக கூட்டணியே (என்டிஏ) ஒரு ஆபத்தான கூட்டணி. விஜய்-ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம். சட்டசபை ேதர்தலில் அதிமுகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடமே இல்லை. பாதியிலேயே போய்விடும். தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நிச்சயம் வடிகட்டி விடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தன்னை மதிக்காத பாஜ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற வேண்டும்: பாஜவை வளர்க்க கூடிய எந்த கூட்டணியும் தமிழக மக்களுக்கு நன்மை தராது appeared first on Dinakaran.

Tags : OPS ,Bahia ,BJP ,Tamil Nadu ,Chennai ,Panruti Ramachandran ,alliance ,PM Modi ,OBS ,Bajaa alliance ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...