×

பாஜவிடம் இருந்து முதலில் அதிமுகவை மீட்டெடுங்கள்: எடப்பாடிக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி

சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் துணை முதல்வரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: நம் தலைவர் நலமாக இருக்கிறார். இன்னும் 3 நாட்களில் விரைவில் அவர் வீடு திரும்புவார். இந்தியாவில் முதல் ஐந்து முதல்வர்களில் நம் தலைவரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

இதையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பாஜ அரசு, நமக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்துக்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை நம் முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார். அந்த முன்னெடுப்பிலும், நம் இளைஞர் அணியினர் முக்கியமான பங்கு வகிக்கிறோம். இன்றைக்கு ஓரணியில் தமிழ்நாடு மூலமாக, கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்களை நாம் திமுகவில் இணைத்து இருக்கிறோம்.

தமிழகத்தை மீட்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் முதலில் பாஜவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள். அதிமுக-பாஜ கூட்டணி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்குள் இந்தி திணிப்பு வரும். தொகுதி மறு வரையறை வரும். புதிய கல்விக் கொள்கை வரும். இதெல்லாம் வரக்கூடாது என்றால் மீண்டும் நம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

பாஜ-அதிமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான போரில் நம் இளைஞர் அணி முன் வரிசையில் நிற்க வேண்டும். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று, தலைவர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இளைஞர் அணியினர் சுறுசுறுப்புடன் அடுத்த ஒன்பது மாதங்கள் நீங்கள் களத்தில் இருந்தீர்கள் என்றால், 200ஐ விட அதிகமான தொகுதிகளில் தமிழ்நாட்டு மக்கள் நம் திமுகவை வெற்றிபெற வைப்பார்கள், அதற்குத் தொடக்கமாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் இந்த மூன்று தொகுதிகளும், மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுகாட்ட வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post பாஜவிடம் இருந்து முதலில் அதிமுகவை மீட்டெடுங்கள்: எடப்பாடிக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Edappadi ,Chennai ,Chennai West District DMK Youth Team ,Anna ,Arivalayam ,Kalaignar Arangam ,DMK Youth Team ,Udhayanidhi Stalin ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...