×

மாஜி விவிஐபி-களின் மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு அல்வா கொடுத்ததால் இலை நிர்வாகிகள் விரக்தியில் இருப்பதை சொல்கிறார்; wiki யானந்தா

‘‘ஒரே வார்டுக்கு 2 பேர் வேட்புனு தாக்கல் ெசய்துள்ளார்களாம். ரவுடி பாலிடிக்ஸ் காரணமாக வேட்புமனு தாக்கல் செய்த இலை கட்சியின் பெண் நிர்வாகி அதிர்ந்து போய் இருக்கிறாராமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி கார்ப்பரேஷன் உள்ளாட்சி தேர்தலில் இலைகட்சி வேட்பாளர்கள் தேர்வில் நேர்மையான கட்சிக்காரங்களை விட, ரவுடிகளின் மிரட்டலுக்கே நிர்வாகிகள் பணிவதாக இலை கட்சியினர் புலம்பறாங்க. இங்குள்ள ஒரு வார்டில் போட்டியிட பல ஆண்டுகளாக கட்சியிலும், இளைஞரணி பொறுப்பிலும் இருக்கும் ஒருவரது மனைவிக்கு வாய்ப்பு கொடுத்தாங்களாம். என்ன ஆனாலும் நீங்கதான் வேட்பாளர். செலவைப்பத்தியெல்லாம் கவலைப்படாதீங்கன்னு பெரிய மக்கள் பிரதிநிதி உறுதி கொடுத்தாராம். ஆனால், வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னாடி, திடீர்னு மாற்று வேட்பாளரை அறிவிச்சிட்டாங்களாம். கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கும் வார்டு செயலாளரின் தாயாருக்குத்தான், கடைசி நேரத்தில் சீட் கைமாறி இருக்காம். எல்லாம் மிரட்டல்தானாம். ஆனால் இது குறித்த தகவல் எதுவும் அறியாத இளைஞரணி நிர்வாகியின் மனைவி மனுதாக்கல் செஞ்சிட்டாராம். விவரம் அறிஞ்சதும் கலங்கிப்போய் நிற்கிறாராம். வேட்புமனு வாங்கச் சொல்லி ஒரு ரவுடி அந்த நிர்வாகியின் மனைவியை மிரட்டுகிறாராம். இப்போது அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற கட்சியின் கடிதம் ஏற்கனவே அறிவிச்ச வேட்பாளருக்கு கிடைக்குமா. அல்லது கடைசி நேரத்தில் பாலிடிக்ஸ் செய்த மிரட்டல் பார்ட்டியின் உறவினருக்கு கிடைக்குமா என்பது தான் சர்ச்சையாக மாறி இருக்காம். இதனால இலை கட்சியினர் அதிர்ச்சியில் இருக்கிறாராம் என்றார் விக்கியானந்தா.‘‘தேனி மாவட்டத்துல வேட்பாளரை மாற்றி, இலை கட்சியின் உண்மை தொண்டரை திணறடித்த நபரை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ மாவட்டம், பிக் பாண்ட் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் இலைக்கட்சி சார்பில் கடந்த 31ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு வார்டுக்கு கட்சியின் எளிய தொண்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைவரும் ஆச்சரியத்தில் வாயை பிளக்க, வேட்பாளரோ உற்சாகத்துடன் குடும்ப சகிதமாக கடந்த 2 நாட்களாக வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென இவர் வேட்பாளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மாஜி துணை விவிஐபியின் உடன்பிறப்பை, வேட்பாளராக அறிவித்து விட்டனராம். ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு நகராட்சி தேர்தலில், தனது மற்றொரு உடன்பிறப்பான கிங்கானவரை மாஜி துணை விவிஐபி நிறுத்தினார். தற்போது, எளிய தொண்டனுக்கு சீட் என பில்டப் கொடுத்து விட்டு, கடைசி நேரத்தில் அல்வா கொடுத்த சம்பவம், இலைக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை சகோதரனுக்கு நகராட்சி தலைவர் பதவி, மகனுக்கு எம்பி பதவி என மாவட்டத்தில் தனது குடும்பத்தினருக்கே முக்கியத்துவம் தருவதாக கூறி இலைக்கட்சியினர், மாஜி துணை விவிஐபி மீது கடும் கோபத்தில் உள்ளனராம்… ஏற்கனவே சொந்த ஊர் உள்ள தொகுதியில் கூட கட்சியை ஜெயிக்க வைக்க முடியாதவர், பட்டியலில் செய்த குளறுபடி சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது..’’ என்றார் விக்கியானந்தா.‘‘கடலூர்ல தாமரை கட்சி கடல்ல மிதக்குதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் இதுவரை 10 வார்டுகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை தாமரை அறிவித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளுக்கு இதுவரை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வரவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாமரை தனித்து போட்டியிடுவதால் தற்போதைய காலக்கட்டத்தில் தேர்தலில் நின்றால் ஒன்றை இலக்கில் தான் வாக்குகள் கிடைக்கும். இதனால் அரசியல் வாழ்க்கை எதிர்காலத்தில் பாதிக்கப்படும். இப்படியே தேர்தலில் நிற்காமல் கரை வேட்டி, துண்டு கட்டியப்படியே அப்படியே வடிவேலு பட பாணியில் போட போட சுனா.. பனாவாக போலீஸ் நிலையம் உள்பட அரசு அலுவலகங்களில் ஆட்சி நடத்துனுமே தவிர தேர்தலில் நிற்கக்கூடாது என்று மாவட்டத்தில் உள்ள 2ம் கட்ட நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். இதனால் அவர்கள், மாவட்ட தலைமைக்கு எங்கள் வீட்டில் தற்போது பிரச்னையாக இருக்கிறது. தேர்தலில் நிற்கக்கூடாது என அழுத்தமாக கூறிவிட்டனர் என தலைமைக்கு தினமும் நிர்வாகிகள் கூறிவருகின்றனர். எங்களை கேட்காமல் அறிவித்தால் நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது எனவும் மிரட்டி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலையின் நிழலில் இளைப்பாறலாம் என்று நினைத்த தாமரை தரப்பினர் புலம்பி வர்றாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இலையுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என்று தாமரை காத்திருந்தது. ஆனால் கட்சி தலைமையோ திடீரென தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. ஏற்கனவே கூட்டணியில் இடம் கேட்டு நேரடியாகவே இலை கட்சி மாவட்ட செயலாளர்களிடம் புக் செய்து இருந்தனர். இதனால் இந்த முறை எப்படியாவது கவுன்சிலர் பதவி பெற்றுவிடலாம் என்ற கனவில் இருந்தனர். ஆனால் தனித்து போட்டி என்ற கட்சி தலைமையின் அறிவிப்பால் தாமரை தரப்பினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் பலர் போட்டி முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டனர். இதனால் வார்டுகளில் கட்சியினர் போட்டியிட வேட்பாளர்களை தேடி வருகின்றனர். இதில் ஒருவழியாக குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். மற்ற இடங்களுக்கு எல்லாம் ஆட்கள் இல்லையாம். மேலும் கட்சி தலைமை ‘‘ப’’ வைட்டமின் வழங்குவதாக கூறி உள்ளதால் அதை எதிர்பார்த்து வேட்பாளர்கள் காத்து இருக்கின்றனர். ‘‘ப’’ வைட்டமின் கொடுத்தால் உடனடியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் என்ற முடிவில் உள்ளனர். இல்லையெனில் அமைதியாக வீட்டிலேயே இருந்துவிடலாம் என்று கூறி வருகின்றனர். இதனால் கட்சி மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது…’’ என்றார் விக்கியானந்தா….

The post மாஜி விவிஐபி-களின் மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு அல்வா கொடுத்ததால் இலை நிர்வாகிகள் விரக்தியில் இருப்பதை சொல்கிறார்; wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : VVIPs ,wiki ,Leaf ,alwa ,wiki Yananda ,
× RELATED சேப்பங்கிழங்கு சமோசா