×

சீட் பங்கீடு பார்முலா முடிந்தது; சம பலத்துடன் போட்டியிடும் பாஜக – நிதிஷ் கட்சி?… பீகார் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

பாட்னா: பீகாரில் ஆளும் கூட்டணியின் சீட் பங்கீடு பார்முலா முடிந்த நிலையில், சம பலத்துடன் பாஜக – நிதிஷ்குமார் கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளன. பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகியவை முக்கியப் பங்காற்றும் இந்தக் கூட்டணியில், மற்ற சிறிய கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தி, அனைவருக்கும் திருப்தியளிக்கும் வகையில் சீட் ஒதுக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் கிட்டத்தட்ட சரிசமமான தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. அதாவது ஐக்கிய ஜனதா தளம் 102 இடங்களிலும், பாஜக 101 இடங்களும் ஒதுக்கிக் கொண்டுள்ளன. கூட்டணியின் முக்கிய அங்கமாக இருக்கும் ஒன்றிய அமைச்சரான சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி, சிராக் பஸ்வான் கட்சிக்கு 18 முதல் 22 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கூட்டணியில் உள்ள மற்ற முக்கிய கட்சிகளான, முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் ‘ஹெச்ஏஎம்’ மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ‘ஆர்எல்எஸ்பி’ ஆகிய கட்சிகளுக்கு தலா 7 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, வரும் தேர்தலில் மெகா வெற்றியைப் பதிவு செய்வதே இந்த வியூகத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பீகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சீட் பங்கீடு பார்முலா முடிந்தது; சம பலத்துடன் போட்டியிடும் பாஜக – நிதிஷ் கட்சி?… பீகார் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது appeared first on Dinakaran.

Tags : Seat ,BJP-Nitish party ,Bihar ,Patna ,BJP ,Nitish ,Kumar ,National Democratic Alliance ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...